full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

குடும்பத்துடன் நம்பி போகலாம் – “கஜினிகாந்த்” டைரக்டர் உறுதி!!

“ஸ்டூடியோ கிரீன்” சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் “கஜினிகாந்த்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு. கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், நாயகன் ஆர்யா, நாயகி சயீஷா, நடிகை நிலீமா ராணி, நடிகர் லிங்கேஸ்வரன், விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்,

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து பேசுகையில்,

“இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவுடன் இணைந்து நான் மதியால் வெல் என்ற ‘விமன்ஸ் ஆந்தம் ’ என்ற பாடல் மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த ஆல்பம் ஒன்றை வெளியிட்டோம். அவருடன் இணைந்து இந்த படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். ஆர்யாவின் ரசிகன் நான். அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தனியார் தொலைகாட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன்=2 நடத்தினால் அதில் கலந்து கொள்ளவேண்டாம். எங்க வீட்டு மாப்பிள்ளை ஆவதை விட ரசிகர்களின் செல்லபிள்ளையாக நீங்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில்,

“இந்த படம் தெலுங்கு படத்தின் ரீமேக். இதற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் காரணம். படபிடிப்பிற்கு முன் தயாரிப்புகளை ஏழே நாளில் இயக்குநர் சந்தோஷ் முடித்துக் கொடுத்து படபிடிப்பிற்கு சென்றார். இது அவரின் திறமை. இந்த படத்தின் வசனங்களும் இளந்தலைமுறையினை கவரும் வகையில் இருக்கும். அவரின் முதல் இரண்டு படங்களும் அடல்ட் படங்களாக இருந்தாலும் வசனங்கள் நன்றாகத்தான் இருந்தது. பாங்காக்கில் பாடல் காட்சியுடன் இப்படத்தின் படபிடிப்பைத் தொடங்கினோம். எனக்கு நடன அசைவுகள் எதுவும் வரவில்லை. ஆனால் உடன் நடிக்கும் நாயகி சயீஷாவிற்கு எளிதாக இருந்தது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடினேன். இந்த படத்தை 38 நாட்களில் இயக்குநர் திட்டமிட்டு நிறைவு செய்தார். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம்” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் பேசுகையில்,

“ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு நான் இயக்கும் முதல் படம் இது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்தவுடன், ஆர்யாவிடம் பேசி இந்த படத்தின் பணிகள் தொடங்கியது. அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது. நாயகி சயீஷா, இந்த படத்தில் அவர் தான் என்னிடம் வேலை வாங்கினார். வசனங்களை கேட்பார். அதை படித்து, பொருள் தெரிந்துகொண்டு காட்சிகளில் சிறப்பாக நடித்தார்.

என்னுடைய முதல் இரண்டு படங்களும் அடல்ட் ஹாரர் காமெடி படங்கள். குடும்பத்துடன் பார்க்கமுடியுமா? என கேள்வி கேட்டு, இதற்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற படங்களை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்கமுடியும். அவர்கள் அந்த படங்களை யாருடன் பார்க்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். இதை தெரிந்தவர்கள் யாரும் இது குறித்து விமர்சனம் செய்திருக்கமாட்டார்கள். ஆனால் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ஏனெனில் துளி கூட ஆபாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறோம்.

இந்த படத்தில் ஒரு குடும்பத்தினர் தங்களின் பிள்ளையின் காதலுக்காக எந்த எல்லை வரைக்கும் பயணிப்பார்கள் என்பதையும், தங்கள் வீட்டு பெண்ணிற்கு எந்த மாதிரியான மாப்பிள்ளையை தேர்வு செய்வோம் என்பதையும் பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாக்கியிருக்கிறேன். கடைக்குட்டி சிங்கம் போல் கிராமீய பின்னணியில் இல்லாமல், நகரத்தின் பின்னணியில் தயாராகியிருக்கும் கஜினிகாந்திற்கும் ஆதரவு தரவேண்டும்” என்றார்.