தமிழகத்தில் திரைப்படங்களுக்கான டிஜிட்டல் கட்டண குறைப்பு, தியேட்டர் கட்டணங்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 16-ம் தேதி முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது.
இதையடுத்து, கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 28-ம் தேதி சுமார் 7 மணி நேரத்துக்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது.
இந்நிலையில், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“படப்பிடிப்பு பணிகள் நடக்காததால் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். டிஜிட்டல் கட்டண விவகாரம், திரையரங்கு கட்டண முறை ஆகியவற்றில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் நியாயம்தான். ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. அவர்கள் ஈகோ பார்ப்பதாக தெரிகிறது. சரியான முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இல்லை.
தமிழக அரசு தலையிட்டால் மட்டுமே இப்பிரச்சினையை தீர்க்க முடியும். எனவே, அரசு கண்டிப்பாக இதில் தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வழிவகை செய்ய வேண்டும். திரைத்துறையை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்” என்று கூறினார்.