full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கவர்னர் அறிவிப்புக்கு தலைவர்கள் கண்டனம்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் தி.மு.க.வினர் கறுப்பு கொடி காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருந்து வருகையில், ஏதோ நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவது போல மாவட்டம்தோறும் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆளுநர் ஆட்சி உண்மையிலேயே நடைபெற்ற கால கட்டங்களில் கூட எந்த ஓர் ஆளுநரும் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்ததில்லை.

இதற்குத் தமிழ்நாட்டில் கடும் கண்டனம் வெடித்துக் கிளம்பியது. குறிப்பாக ஆய்வு செய்ய ஆளுநர் மாவட்டங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க. கறுப்புக் கொடி காட்டும் ஜனநாயகக் கடமையைச் செய்து வருகிறது.

மாநில ஆளுநர் மாவட்டம் தோறும், சென்று ஆய்வு நடத்துவதற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு முதுகெலும்பு அற்ற முறையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

‘‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?’’ என்று கேட்டவர் அறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சி மாநில உரிமையைக் கொச்சைப்படுத்தும் ஓர் ஆளுநருக்கு ஆலவட்டம் சுழற்றுவது வெட்கக்கேடு.

வார்த்தைக்கு வார்த்தை அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று லாலி பாடும் முதல்-அமைச்சர் உள்ளிட்டோருக்கு அந்த அம்மா ஆளுநர் பிரச்சினையில் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என்ற தகவல் தெரியுமா?

1993 ஆகஸ்ட் மாதம் 8-ம் நாளன்று சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி நேரடியாக சென்று கள ஆய்வு செய்தார்.

ஆளுநர் அங்கு சென்றதற்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இதன்பிறகு 1995-ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற ஆளுநர் சென்னா ரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆளுநரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா புறக்கணித்தார்.

அதுமட்டுமல்லாது, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்குப் போகக் கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்தார்.

ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க.வினர் மீதான வழக்கை ரத்து செய்து, ரிமாண்ட் செய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

குட்டக் குட்ட குனிந்து கொடுத்தால் இதற்கு மேலும் ஆளுநர் செய்வார்-செல்வார் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.” என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், “அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, மாநிலங்களின் உரிமைகளிலும், மக்களின் உரிமைகளிலும் தலையிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, என் வீட்டிற்குள் நுழைந்து நான் என்ன சமைக்கிறேன்? என் குழந்தைக்கு என்ன சட்டை வாங்கி கொடுக்கிறேன்? என்ன மொழியில் பாடம் கற்பிக்கிறேன்? என்பதையெல்லாம், எனக்கு உரிமை இருக்கிறது நான் கட்டாயம் கேட்பேன் என்று ஆளுநர் வருவாரேயானால், என் வீட்டு வாசலில் அவரை நிறுத்துவதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது.

இதை ஆளுநரும் புரிந்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் தலைமை நீதிபதியும் புரிந்துக் கொள்ள வேண்டும். காவல்துறையின் தலைமை அதிகாரியும் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதோ அதுபோல, குடிமக்களுக்கும் தங்களை தனி உரிமையில் பாதுகாத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அது அதிகாரத்தை விட அதிக பலம் பெற்றது.

1947-ம் ஆண்டு முதல் ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள், எப்போதும் இல்லாத அளவிற்கு இவர் சுற்றிச் சுற்றி சடுகுடு ஆடுவது போல வலம் வருகிறார், ஏன் என்று நாங்கள் கேட்பதற்கு காரணம், எங்களை அத்தனை பேருமே திருடர்கள் என்றும், நீங்கள்தான் காவலாளர் என்றும் வருகிறீர்களா? தமிழகம் ஒன்றும் டெல்லிக்கு அடிமைப்பட்டு இல்லை. நீங்கள் நுழைவதும் இந்த கேள்விகளை கேட்பதற்கே அதிகாரம் இருக்கிறது என்று வருவதால், உங்களால் தமிழகம் தன்னுடைய அடிப்படை ஜனநாயக உரிமை இழந்திருக்கிறது. இதனால் டெல்லிக்கு தமிழகம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதாகத் தான் எங்கள் கண்ணுக்கு தெரிகிறது.

எங்களை பொறுத்த வரையில் ஆளுநர் என்ற ஒரு பதவி அவசியம் தானா என்று நாங்கள் நெடுநாட்களுக்கு முன்பே எழுப்பிய கேள்வி. இதனை மத்திய அரசு இந்திய அரசியலமைப்பில் வைத்திருக்கிறது. அது மாநிலத்தின் உரிமையை பாதுகாப்பதற்கும், செழுமைப்படுத்துவதற்கும் இருக்க வேண்டுமே அன்றி, அதனை அசிங்கப்படுவதற்காக பயன்படுத்தப்படுமே ஆனால், டெல்லி அதிகாரத்தால் நியமிக்கப்பட்ட இந்த அதிகாரியை கட்டாயம் நாங்கள் எதிர்க்கத்தான் செய்வோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மக்களால் தேர்ந்தெடுப்பட்ட அரசு இருக்கும்போது, இரட்டை ஆட்சி நடப்பதை போன்று ஆளுநர் செயல்படுவது கண்டனத்திற்குரியது. ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர் ஆளுநராக தொடர்வதற்கே தார்மீக உரிமை இல்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

எந்த வகையிலும் சட்ட வரம்பிற்குள் உட்படாத ஒருவர் ஆளுநராக நீடிப்பது நியாயமா? என்ற ஒரு கேள்வி தமிழகத்தில் நீடிக்கும்போது, அவர் நான் சட்டப்படி மாவட்டங்களுக்குப் போய் ஆய்வு செய்கிறேன் என்கிற போது, மாநில அரசாங்கம் எதற்கு இருக்கிறது.

ஒரு ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும். அதுதான் ஆளுநருக்கு இருக்கின்ற அதிகாரம்.

மாநில அமைச்சர்-அதிகாரிகளின் செயல்பாட்டில் இவர் சென்று ஆய்வு செய்தால், தமிழகத்தில் ஒரு இரட்டை அரசாங்கம் செயல்படுகிறதா? என்ற கேள்விதான் எழுகிறது.” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், “தமிழகத்தில் ஆளுநரின் ஆய்வு தொடரும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது. மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ளாவிட்டால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தீவிரமாக போராடுவோம். ‘‘ஆளுநர் சட்டப்படிதான் நடந்து கொள்கிறார். எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றன’’ என்கிற முறையில் ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.

ஆளுநர் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவரை எதிர்த்து தீவிரமாக போராடுவோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:-

தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக அறப் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிறையில் இருக்கும் தி.மு.க.வினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளார்.