full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஒரு ஊரில் அழகே உருவாய் – கௌதமின் தேவதைகள்!

கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் சினிமாவின் ரசனைமிகு இயக்குனர் என்பதை விட இந்திய சினிமாவின் ரசனைமிகு இயக்குனர் என்று சொன்னால் மிகப்பொருத்தமாக இருக்கும். கதாநாயகன் தொடங்கி காமெடியன், வில்லன் வரை அனைவருமே அழகாகவே இருப்பார்கள் கௌதமின் படத்தில். அவர்கள் அணிந்திருக்கும் ஆடை அழுக்கானதாக இருந்தால் கூட அதில் ஒரு நேர்த்தி மிளிரும். கௌதமின் கதாபாத்திரம் அனைத்துமே ஆங்கிலம் கலந்து பேசுவது நமக்கு சற்று அந்நியமாக இருந்தாலும் அது உறுத்தாது. அவரின் படங்களில், ஒவ்வொரு காட்சியிலுமே ஒரு ஓவியத் தன்மை மின்னும்.. அது சண்டைக் காட்சியாக இருந்தாலும்!

சாதாரனமாக காமெடியனை அழகாகக் காட்டவே மெனக்கெடும் கௌதம், தன் படத்தின் நாயகிகளை எப்படிக் காட்டுவார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பொதுவாகவே தமிழ் சினிமாவில் நாயகிகள், ஆடைக் குறைப்பினால் மட்டுமே இளைஞர்களைக் கவர முடியும் என்ற நம்பிக்கைக்கு ஆளாக்கப்பட்டவர்கள். அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கி ரசிகனை மகிழ்விக்க ஆடைக் குறைப்பு தேவையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் கௌதம் வாசுதேவ் மேனன்.

“மின்னலே” ரீமாசென், “காக்க காக்க” ஜோதிகா, “வேட்டையாடு விளையாடு” கமாலினி முகர்ஜி, “பச்சைக்கிளி முத்துச்சரம்” ஆண்ட்ரியா, “வாரணம் ஆயிரம்” சமீரா ரெட்டி, “விண்ணைத்தாண்டி வருவாயா” த்ரிஷா, “நீதானே என் பொன்வசந்தம்” சமந்தா, “என்னை அறிந்தால்” அனுஷ்கா, “அச்சம் என்பது மடமையடா” மஞ்சிமா மோகன் என அனைவரையும் அந்தந்த நடிகைகளே வியந்து போகும் அளவிற்குக் கண்ணியமான் முறையில் அழகாக காண்பித்திருப்பார்.

“மின்னலே” படத்தில் கடற்கரையில் மாதவனிடம் காதலை சொல்லும் போதாகட்டும், வசீகரா பாடலுக்கு முன்பான சமையலறைக் காட்சியிலாகட்டும், வெண்மதி வெண்மதி பாடலினிடையே அழுதபடியே ஷவரில் நனைவதாகட்டும் ரீமாசென் அவ்வளவு அழகாக இருப்பார். மின்னலேவைத் தவிர ரீமாசென் அழகாய் காட்டப்பட்டிருப்பதாய் ஒரு படத்தைக் கூட பட்டியிலிட முடியாது என்று நம்பிக்கையாய்க் கூறுமளவிற்கு கட்சிப்படுத்தியிருப்பார் கௌதம்.

“ஒரு ஊரில் அழகே உருவாய்” என்ற பாடலுக்கு ஜோதிகாவை அந்த பாடலின் வரிகளுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் வேறு எந்த இயக்குனராலும் காண்பித்திருக்க முடியாது. முதன் முதலாக சூர்யாவின் வீட்டிற்கு வரும்போது, அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டு இருளடைந்திருக்கும் அறையில் மெல்லிய ஒளியின் வாயிலாகத் தெரியும் ஜோதிகாவின் முகம்.. அது எப்போதுமே அழகைப்பேசும் ஒரு ஓவியமாய் நினைவில் இருக்கும். “ஒன்றா இரண்டா ஆசைகள்” பாடலில் ஜோதிகாவை தங்களின் ஆசை நாயகியாக காணாத இளைஞர்கள் மருத்துவமனைக்குப் போக வேண்டியவர்களாகவே இருந்திருப்பார்கள். இவ்வளவு ஏன், ஜீவன் ஜோதிகாவைக் கடத்தி வைத்திருக்கும் போது வாயில் துணியைக் கட்டி வைத்திருப்பார். அப்போது அந்த முன்னந்தலையில் முடி கலைந்து லேசாக முகத்தில் சரிந்திருக்கும், அந்த காட்சியில் ஜோதிகாவின் அழகு முகம் பதைபதைக்கும் போது நாமும் சேர்ந்தே பதைபதைத்துப் போவோம். அங்கே தான் கௌதம் என்னும் ரசிகன் வெல்கிறார் நம்மை.

“பார்த்த முதல் நாளே” யார் இந்த அழகி என்று எல்லோரையும் உறைய வைத்த ஒரு பாடல், அப்பட்டித் தான் கமாலினி முகர்ஜி. இவரது பேரே புரியாவிட்டாலும் நம் இளைஞர்கள் சொக்கிப் போனார்கள். கமல் ”ரெண்டு நிமிசத்துல சொல்லிருப்பேன்.. நீங்க தப்பா எடுத்துப்பீங்களோன்னு தான் அரைமணி நேரம் வெயிட் பண்ணினேன்” என்று தன் காதலை சொல்லும் போது, கொடுப்பாரே ஒரு ரீயாக்சன்.. அங்கே தன் நம்மவர்கள் சரண்டர் ஆகியிருப்பார்கள். குறைந்த காட்சிகளே வந்தாலும் படம் முழுக்க கமாலினி இருப்பதாகவே நமக்குத் தோன்றும்.

“வாரணம் ஆயிரம்” படத்தில் ட்ரெயினில் சமீரா ரெட்டியைப் பார்த்ததும் சூர்யா மார்பிலேயேக் குத்திக் கொள்வாரல்லவா, கிட்டத்தட்ட நாம் எல்லோரும் அப்படித்தான் இருந்திருப்போம் அந்தக் காட்சியின் போது. சூர்யா விழிகளை மூடிக்கொண்டு தெரியாமல் தன்னை ரசிப்பதை உணர்ந்ததும் தலையை ஆட்டி ஒரு சிரிப்பு சிரிப்பார் சமீரா.. நிஜமாகவே தேவதை லெவல் சிரிப்பு அது. “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடலில் ஒரு பச்சைப் புடவையில் ஸ்லோவ் மோஷனில் ஓடிவந்து நிற்பாரே, அதெல்லாம் விவரிக்க தனியாய் கவிதை எழுத வேண்டும். அத்தனை பெருமையும் கௌதமையேச் சாரும்.

“விண்ணைத்தாண்டி வருவாயா”… தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதாபாத்திரம் தனக்குக் கிடைத்திருக்கக் கூடாதா? என்று ஒவ்வொரு நாயகியும் ஏங்கும் படி ஜெஸ்ஸியை வடிவமைத்திருப்பார் கௌதம். ஜெஸ்ஸி போல ஒரு காதலியை ஒவ்வொரு இளைஞனும் கடந்து வந்திருப்பான் என்பதை திரிஷாவை வைத்து அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார். இந்த படத்தில் நம்மால் இதுதான் என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லாமல் வந்துபோகும் எல்லா காட்சியிலும் அழகே உருவாய் இருப்பார் திரிஷா. “மண்ணிப்பாயா” பாடலுக்கு முன்னும் பாடலுக்கு இடையேயும் இப்பொழுது பார்த்தாலும் திரிஷாவின் மேல் நமக்குக் காதலுண்டாகும். திரிஷா தன் வாழ்வில் யாருக்கேனும் நன்றி சொல்லையே ஆகவேண்டும் என்றால், தயங்காமல் கௌதமிற்குச் சொல்லலாம்.

“அச்சம் என்பது மடமையடா” படத்தில் மஞ்சிமா மோகன் முதன் முதலாக சிம்புவின் வீட்டிற்கு புடவையில் வருவார். சிம்பு மயங்கியது போல ஒரு பாவணை செய்வார். அவர்மட்டுமல்ல நாமும் சேர்ந்தே அந்த பாவணை தான் தருவோம். தோழிகளோடு மஞ்சிமா நடந்துவரும் அந்த காட்சியை பார்த்துக்கொண்டே இருக்கலாம், அப்படி படம்பிடித்திருப்பார் கௌதம். லாரியில் மோதி விபத்திற்குள்ளாகும் போது ஒலிக்கும் “தள்ளிப் போகாதே” பாடலிலும், “அவளும் நானும்” பாடலிலும் மஞ்சிமாவைக் காண நிச்சயமாய் இரண்டு ஜோடி கண்கள் வேண்டும். கண்டிப்பாக இதை சொல்லியே ஆக வேண்டும், Mr.கௌதம் ரசிகனய்யா நீர்!

இப்போது “துருவ நட்சத்திரம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவரது புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது, அதைப் பார்த்த நொடியில் தான் இதை எழுதவும் தோன்றியது… நிச்சயமாய் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு அழகின் கண்கள் தான்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவிடம் திரிஷா ஒரு வசனம் பேசுவார், “உன் கண் வழியா யாரும் என்னைப் பார்க்கலையோ என்னவோ” என்று. அது நூற்றுக்கு நூறு கௌதமிற்குப் பொருந்தும், அவர் கண்கள் காண்பதைப் போல் இங்கு யாரும் நாயகிகளைக் காண்பதில்லை.