full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

மீனவர்களின் கதையை படமாக்கும் கிராபிக்ஸ் கலைஞன்

கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் – நந்திதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் `உள்குத்து’.

`திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து, இரண்டாவது முறையாக கார்த்திக் ராஜு – தினேஷ் இணைந்துள்ளனர். அதேபோல் ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு தினேஷும் – நந்திதாவும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கின்றனர்.

விரைவில் வெளியாக இருக்கும் இத்திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கார்த்திக் ராஜூ, “என்னுடைய அடிப்படையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்வதுதான். சென்னையில் கிராபிக்ஸ் படித்துவிட்டு வேலைக்கு சேர்ந்தேன். படையப்பா, முதல்வன், அந்நியன், பாய்ஸ், சச்சின், எந்திரன், தசாவதாரம், சந்திரமுகி, கில்லி, போக்கிரி போன்ற படங்களில் வேலைப்பார்த்தேன்.

என் வேலை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இரட்டை வேடங்கள் பற்றி நடிகர்களுக்கு சொல்லிகொடுப்பது. இதன் மூலம் தான் சினிமா ஆர்வம் எனக்குள் வந்தது. அந்த அனுபவத்தில் தான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமலேயே இயக்குநர் ஆனேன். நான் இயக்கிய முதல் படம் “திருடன் போலீஸ்”. அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன் பின் “உள்குத்து” என்ற படத்தை இயக்கியுள்ளேன். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் மீன் சந்தை ஒன்று உள்ளது அங்கு மீன் விற்பனை நடைபெறும் அதன் அருகில் சின்ன பசங்க அந்த மீனை வெட்டி கிலோவிற்கு 20 ரூபாய் என சுத்தம் செய்து கொடுப்பார்கள். அதை நான் ரொம்ப நாளாவே கவனித்து வந்தேன். மீன் சந்தையில் புதன், சனி, ஞாயிறு மட்டுமே வேலை இருக்கும். மற்ற நாட்களில் அந்த சிறுவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். அப்போது தோன்றியது தான் இந்த கதை.

அவர்களை சார்ந்த கதையை எழுதலாம் என்று முடிவு செய்தேன். அது தான் இந்த உள்குத்து. மேலும் அந்த சந்தையில் மீன் விற்பவர்களிடம் தகவல்களை சேகரித்தேன். அதுவும் மிக சுவாரசியமாக இருந்தது. மீனவர்களுக்கு மீன் வாங்க கையில் காசு இருக்காதாம். பின்னர் காலையில் மீனவர்கள் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு கடன் கொடுப்பவர்கள் ஒரு லட்சத்தில் பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு மீதமுள்ள தொன்னுராயிரம் ரூபாய் பணத்தை மட்டுமே கையில் தருவார்கள். மாலையில் ஒரு லட்சம் ரூபாயாக மீனவர்கள் கடன் கொடுப்பவர்களிடம் கொடுக்கவேண்டும் என்ற விஷயத்தை என்னிடம் கூறினார்கள். நான் அவர்களிடம் மீன் விற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் மீனை நாங்கள் ஐஸ் பாக்ஸில் போட்டு விடுவோம் மறுநாள் விற்பனை செய்வோம் என்றார்கள். ஆனால் அன்று ஐந்தாயிரம் ரூபாய்க்கு மட்டும் விற்று இருந்தால் எங்கள் பாடு திண்டாட்டம் தான் அடி, உதை கூட சமயத்தில் விழும் எங்களால் எதுவுமே செய்ய முடியாது.

ஏனென்றால் மீண்டும் நாங்கள் அவர்களிடம் தான் எங்கள் தேவைக்கு பணம் வாங்க வேண்டியிருக்கும். அது கந்து வட்டியா இருக்குமோ என்று கூட எங்களுக்கு சொல்ல தெரியவில்லை என்றார்கள். அதே போல் அந்த பசங்களும் சில விஷயத்தை என்னிடம் சொன்னார்கள் நான் மீன் வெட்டுகிறேன். ஒரு கிலோக்கு 20 ரூபாய் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு மணி நேரத்தில் இருபது முதல் இருப்பத்தைந்து கிலோ வரை மீனை வெட்டுவேன். அதன் பின் எனக்கு எந்த வேலையும் இல்லை என்றான் அந்த சிறுவன். நான் இந்த சின்ன பசங்களை மையப்படுத்தி ஒரு ரவுடிதனத்தை உட்புகுத்தி கதை தயார் செய்தேன். இந்த சின்ன பசங்களுக்கு வேலை இல்லாத நேரத்தில் இவர்களை யாராவது தவறாக பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று கற்பனையில் ஒரு கதையை உருவாக்கினேன்.

அவர்களிடம் இதை பற்றி விசாரித்தேன். அவர்களும் என் கற்பனையில் வந்தது போல் அவர்களை சிலர் தவறான விஷயத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். அதை மையப்படுத்தியும் ஒருவன் தன் வீட்டில் உள்ளவர்களை விட நண்பனிடம் தான் அதிக விஷயங்களை பகிர்ந்து கொள்வான் என்ற விதத்தில் கிட்டதட்ட 25 வருட நட்பை மையப்படுத்தியும், ஒரு நண்பனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் நண்பன் எப்படி அதை கையாளுவான் என்றும் இந்த கதையை அமைத்தேன். உள்குத்து என்பது உள்ளே ஒன்றை வைத்து வெளியே ஒன்றை செய்வது என்று அர்த்தம்.

இந்த கதையும் அதை சார்ந்து தான் இருக்கும். சினிமா துறையை சார்ந்த அசோக் என்பவர் சமீபத்தில் கந்து வட்டி பிரச்சனையால் இறந்துவிட்டார். அச்சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளது. மதுரை பேருந்து நிறுத்தத்தில் என் நண்பன் ஒரு கடை வைத்து இருந்தார். அவர்களின் வாழ்க்கை முறையானதும் அப்படிதான். காலையில் ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டால் அதை கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி என ஐயாயிரம் ரூபாய் எடுத்துவிட்டு மீதம் நாற்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பார்கள். மாலை அதை திருப்பி தராவிட்டால் பெரிய பிரச்சனையை கடன் வாங்கியவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் கொடுப்பார்கள். இது எல்லா துறையிலும் நடக்கும் ஒன்றாக ஆகிவிட்டது.

ரோட்டோரம் கடை போடுபவர்களுக்கு வங்கி கடன் கொடுக்க போவது இல்லை எனவே வேறுவழி இல்லாமல் அவர்கள் கந்துவட்டி வாங்கி தான் ஆகவேண்டும். அந்த கந்து வட்டி கொடுப்பவர்கள் தன் பணத்தை அடியாள் வைத்து தான் வசூல் செய்வார்கள். கந்து வட்டி கும்பல் தலைவனிடம் வேலை செய்யும் ஐம்பது பேரில் நான்கு நண்பர்கள் எப்படி இருப்பார்கள் அதில் ஒருவனை ஒரு பிரச்சனையில் தலைவன் கொலை செய்தால் மற்ற நண்பர்கள் எப்படி தலைவனை கையாளுவார்கள் என்பதே படத்தின் கதை. இந்த கதை ஒரு வருடத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டதால் தற்போதைய நிகழ்வுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. திருடன் போலீஸ் படத்தின் படப்பிடிப்பின் போதே நான், தினேஷ், பாலசரவணன் ஆகிய மூவரும் மீண்டும் இணைவதாக முடிவுசெய்துவிட்டோம்.

தினேஷ் கதைக்காக கடுமையாக உழைக்க தயாராக இருக்கும் ஒரு நபர். படத்தின் கதாநாயகி துணிக்கடையில் வேலை செய்யும் சாதாரண பெண்ணாக நடித்துள்ளார். ஏற்கனவே நந்திதா தினேஷ் இருவரும் அட்டகத்தியில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். எனவே நந்திதாவையே கதாநாயகியாக முடிவு செய்தோம். இந்த படத்தில் தினேஷுக்கு அழுக்கான மீன் வெட்டும் பையன் ரோல். படப்பிடிப்பின் பெரும் பகுதியை முட்டம் என்ற இடத்தில் நடத்தினோம். அருமையான இடமாக இருந்தது. ஜஸ்டின் பிரபாகரனை பண்ணையாரும் பத்மினியும் இசை வெளியீட்டு விழாவில் முதல் முதலில் பார்த்தேன். அவர் மேடையில் எதுவும் பேசாமல் கடவுளுக்கு நன்றி என சொல்லிவிட்டு ஓடிவிட்டார். அதன் பின் பாடல்களை திரையிட்டனர் பாடல்கள் அருமையாக இருந்தது. அப்போதே அடுத்த படத்தில் அவருடன் வேலை செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

படத்தின் சில காட்சிகளை பார்த்து படத்திற்கு பாடல்கள் அமைக்கபட்டது. படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் ஒரு பாடலை பாடலாசிரியர் விவேக் மற்றொரு பாடலை கவிஞர் கட்டளை ஜெயா எழுதியுள்ளார்கள். படத்தின் ஒளிப்பதிவாளர் P.K வர்மா இவர் அட்டக்கத்தி, குக்கூ போன்ற படங்களில் வேலை பார்த்தவர். குக்கூ படத்தை பார்த்து அவருடனும் வேலை செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். எனக்கு காமெடி மற்றும் அதை சார்ந்த உணர்ச்சிவசமான கதைகளையே படமாக எடுக்க பிடிக்கும். தேவைபட்டால் கிராபிக்ஸ் அமைத்துக் கொள்வேன். ஆனால் கிராபிக்ஸ் சார்ந்த படம் எடுக்க மாட்டேன்” என்றார் இயக்குநர் கார்த்திக்ராஜு.