நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), ஜூலை 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. மொத்தம் 4 வகையாக ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் இருக்கும்.
எந்தெந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எவ்வளவு வரி என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கடந்த வாரம் இறுதி செய்தது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று கூறியது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் கூறியதாவது:–
தற்போது, ஸ்மார்ட் போனுக்கு 2 சதவீத மத்திய உற்பத்தி வரியும், வாட் வரியும் விதிக்கப்படுகிறது. இந்த வாட் வரி, 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.
வாட் வரியை சராசரியாக 12 சதவீதம் என்று வைத்துக்கொண்டால், தற்போது ஸ்மார்ட் போனுக்கு 14 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் 12 சதவீத வரிதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ஸ்மார்ட் போன் விலை குறையும்.
சிமெண்டுக்கு தற்போது 31 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி விகிதம் 28 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சிமெண்டு விலை குறையும்.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் அனைத்துவித மருந்துகளுக்கு தற்போதைய வரி 13 சதவீதம். ஆனால், ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதம் மட்டுமே. இதனால் அவற்றின் விலையும் குறையும்.
இவ்வாறு நிதி அமைச்சகம் கூறியுள்ளது.