full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

குஜராத்தில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

22 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் குஜராத் சட்டசபையின் பதவி காலம் ஜனவரி மாதம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 9-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

2-வது மற்றும் இறுதிக் கட்டமாக நாளை 93 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 69 பேர் பெண்கள். பா.ஜனதா சார்பில் 93 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 91 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இதுதவிர பகுஜன் சமாஜ்- 75, தேசியவாத காங்கிரஸ்-28, சிவசேனா-17, ஆம் ஆத்மி-8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-3, இந்திய கம்யூனிஸ்டு-1 மற்ற கட்சிகள்-185 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. என்றாலும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

2-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 2.22 கோடி பேர் வாக்களிக்கிறார்கள். இதில் 1.15 கோடி பேர் ஆண்கள், 1.07 கோடி பேர் பெண்கள்.

நாளைய தேர்தலுடன் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 4 தொகுதிகளில் உள்ள 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடக்கிறது.

இதையொட்டி நேற்று இறுதிக்கட்ட பிரசாரம் நடந்தது. பிரதமர் மோடி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டங்களில் பேசினார். பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் பா.ஜனதா முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத், வசுந்தரா ராஜே சிந்தியா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஆமதாபாத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோரும் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார்கள்.

தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியும், ராகுல்காந்தியும் போட்டி போட்டு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்கள்.

பிரதமர் மோடி தனது பிரசாரத்தின் போது, காங்கிரசுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும், தேர்தலை தடுக்க சதி, தன்னை தீர்த்துக் கட்ட சதி என குற்றச்சாட்டுகளை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளை ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன், துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

வருகிற 18-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று காலை முதல் முடிவுகள் வெளி வரத் தொடங்கும். பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதாலும் 3 முறை முதல்-மந்திரியாக இருந்துள்ளதாலும் குஜராத் தேர்தல் முடிவு பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.