full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

முதற்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கிய குஜராத் தேர்தல்

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். முதற்கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுமுன்தினம் மாலையுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 89 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பெண்கள் மற்றும் இளைஞர்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 57 பெண்கள் உள்பட 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், பா.ஜ.க. சார்பில் முதல்வர் விஜய் ரூபானி ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

முதல் கட்ட தேர்தலில் நடைபெறும் 89 தொகுதிகளில் 2.12 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக 24,689 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 27,158 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் கூடிய ரசீது வழங்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2-ம் கட்ட தேர்தல் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.