தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் பூஜா ஹெக்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகைகள் பலர் டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். அவற்றில் தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள், அரசியல், சமூக விஷயங்கள் தொடர்பான கருத்துக்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்கள் இந்த வலைத்தள கணக்குகளில் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்குவது தொடர்கிறது. சமீபத்தில் நடிகைகள் அபர்ணா முரளி, ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரின் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் முடக்கி உள்ளனர். இதையடுத்து தொழில்நுட்ப குழுவினர் உதவியுடன் சில மணிநேரத்தில் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் சரிசெய்யப்பட்டது. இதற்காக உதவிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இவர் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் பெயரிடப்படாத படமொன்றில் பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கினால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.