கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் சமையல், விவசாயம், உடற்பயிற்சிகள், யோகா செய்தல் என்று நேரத்தை கழிக்கின்றனர். நடிகர் சல்மான்கான் மும்பையில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி விவசாய வேலைகளை செய்கிறார். ஏற்கனவே திரைத்துறையில் ஊரடங்கினால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். சினிமா தினக்கூலி தொழிலாளர்கள் 23 ஆயிரம் பேரின் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தினார்.
தற்போது பண்ணை வீட்டில் சல்மான்கான் தோட்ட வேலைகள் மற்றும் விவசாயம் செய்ய தொடங்கி உள்ளார். வயல்வெளிகளில் இறங்கி வேலை பார்க்கும் புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டார். உடல் முழுவதும் சேறான நிலையில் தரையில் சல்மான்கான் உட்கார்ந்திருக்கும் இன்னொரு படமும் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தின் கீழே அனைத்து விவசாயிகளையும் மதிப்பதாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
உடலில் செயற்கையாக சேற்றை பூசி சல்மான்கான் நடிக்கிறார் என்று விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. உடலில் சேற்றை பூசிக் கொண்டு எதற்காக விவசாயி போல வேஷம் போடுகிறீர்கள். எந்த விவசாயியாவது போட்டோஷுட் நடத்தி உள்ளாரா? அந்த சேற்றை கூட உங்களால் சரியாக தடவிக் கொள்ள முடியவில்லையே என்று கிண்டலடிக்கின்றனர். எந்த விவசாயியும் முகத்தில் சேறு பூசிக்கொள்ள மாட்டார். நீங்கள் நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். சுஷாந்தின் ஆன்மா உங்களை சும்மா விடாது என்றும் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.