நாயகன் பரத், மனைவி வாணி போஜன் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். வாணி போஜன் திகில் கனவால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தால் இருக்கிறார். அதே சமயம் பரத் ஒரு விபத்தில் உயிர் தப்பிக்கிறார்.நேரம் சரியில்லை என்று வாணி போஜன் ஊரில் இருக்கும் குல தெய்வத்திற்கு, கடா வெட்டி சாமி கும்பிட குடும்பத்துடன் செல்கிறார் . அங்கிருந்து திடீர் வேலையாக பரத் ஊருக்கு கிளம்புகிறார். செல்லும் வழியில் முகமூடி அணிந்த மர்ம மனிதன் ஒருவன் பயமுறுத்துகிறான். மேலும் பரத்தை அடித்து விட்டு மனைவி வாணி போஜன் மற்றும் மகனை காரில் கடத்தி செல்கிறான்.
இறுதியில் மர்ம மனிதன் யார்? பரத் குடும்பத்தை பயமுறுத்த காரணம் என்ன? மனைவி வாணி போஜன் மற்றும் மகனை பரத் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பரத், திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவி மற்றும் மகன் மீது பாசம், பரிதவிப்பு, கோபம் என கிடைக்கும் இடங்கள் அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் வாணி போஜன் எதார்த்தமாக நடித்து கவனிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்சில் அழும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார்.
கே.எஸ்.ரவிகுமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராஜ் குமார் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.சின்ன கதையை மர்ம திகில் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சக்திவேல். மெதுவாக நகரும் திரைக்கதை போக போக வேகம் எடுக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் வரும் திருப்பம் ஆச்சரியப்பட வைக்கிறது. வழக்கமான திகில் படங்கள் போல் இல்லாமல் இருப்பது சிறப்பு.சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும், பிரசாத்தின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. திகில் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொடுத்து இருக்கிறார்கள்.