full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :
Latest Update

பூநூலே இல்லாத கலைஞானி நான் : கமல்ஹாசன்

 

‘முரசொலி’ நாளிதழின் பவள விழா வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

விழாவில், ‘இந்து’ குழுமத்தின் தலைவர் இந்து என்.ராம், நடிகர் கமல்ஹாசன், ‘தினத்தந்தி’ தலைமை பொதுமேலாளர்(நிர்வாகம்) ஆர்.சந்திரன், கவிஞர் வைரமுத்து, ‘ஆனந்த விகடன்’ குழுமத்தின் மேலாண் இயக்குனர் பா.சீனிவாசன், ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் ‘தினமலர்’ ஆசிரியர் ரமேஷ், ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆசிரியர் பகவான் சிங், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆசிரியர் அருண்ராம், ‘தினகரன்’ செய்தி ஆசிரியர் மனோஜ் குமார், ‘நக்கீரன்’ கோபால் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

‘முரசொலி’ ஆசிரியர் முரசொலி செல்வம் வரவேற்று பேசினார். நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் நன்றி கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது:–

நான் வயது வந்தது முதல் கருணாநிதியின் ரசிகனாக இருந்து வந்திருக்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வருகிறாரா? என்று கேட்டேன். அவர் வருகிறார், வந்து பார்வையாளர் இடத்தில் அமர்கிறார் என்று சொன்னார்கள். ரஜினிகாந்தும் மேடைக்கு வந்தால், அவர் கையை பிடித்துக்கொண்டு நானும் நின்றுகொள்ளலாம், வம்பில் மாட்டிக்கொள்ளமாட்டோம் என்று நினைத்தேன்.

விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்துவிட்டு சென்றதும், கண்ணாடியை பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன். அப்போது ‘அடேய் முட்டாள் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய்.. இந்த விழா எப்படிப்பட்ட விழா என்பதை முதலில் புரிந்துகொள்’ என்று தோன்றியது. தற்காப்பு முக்கியம் இல்லை, தன்மானம் தான் முக்கியம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், இந்த மேடையில் வீற்றிருக்கும் பெரிய பத்திரிகை ஆசிரியர்களுடன், பாதியில் பத்திரிகை நடத்தமுடியாமல் பாதியில் நிறுத்திய கடைநிலை பத்திரிகை ஆசிரியராக இந்த மேடையில் அமரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இது மாபெரும் வாய்ப்பு, அவர்களுடன் அமர தகுதியானவனா? என்பதை யோசித்து பார்க்காமல் வாய்ப்பை பறித்துக்கொண்டேன்.

அந்த விழாவுக்கு(முரசொலி பவள விழா) சென்று கழகத்தில்(தி.மு.க.) சேர்கிறீர்களா? என என்னை கேட்கிறார்கள். சேர்வதாக இருந்தால் 1983–ல் கருணாநிதி அனுப்பிய ஒரு ‘டெலிகிராம்’ எனக்கு வந்து சேர்ந்தது. அது ஓரு கேள்வி. அந்த பெரும்தன்மையை நான் இன்றும், என்றும் மறக்கமாட்டேன். நீங்கள் ஏன் தி.மு.க.வில் சேரக்கூடாது? அந்த ‘டெலிகிராமை’ வெளியில் காட்டவும் தைரியம் இல்லை. பதில் சொல்லவும் தைரியம் இல்லை. அதை மடித்து உள்ளே வைத்துவிட்டேன். பதில் இன்று வரை சொல்லவில்லை. அவரது பெருந்தன்மை என்னவென்றால் மறுபடியும் அவர் கேட்கவில்லை. அது மூதறிஞர்களுக்கு, பெரியவர்களுக்கே உரித்தான தன்மை. அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். ஒருவரை ஒருவர் விமர்சித்தும், கிண்டல் அடித்தும் பேசியவர்கள் எல்லாம் இந்த மேடையில் இருக்கும் இந்த ஒரு புதிய கலாசாரத்தை நானும் பயில இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்.

‘ஆனந்த விகடன்’ சீனிவாசன் பேசும்போது எங்கள் பத்திரிகை பற்றி ‘பூநூல் பத்திரிகை என்றும், பாரம்பரிய பத்தரிகை என்றும் சொல்லி கிண்டல் அடித்திருக்கிறார்கள்’ என்று சொன்னார். அவரே சந்தோ‌ஷமாக இந்த விழாவுக்கு வந்திருக்கும் போது, பூநூலே இல்லாத கலைஞானி இந்த விழாவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம்? ஏன் இப்படி பதறுகிறீர்கள்? இது ஒரு பத்திரிகையின் வெற்றி விழா.

இங்கே வந்து ஏதாவது அரசியல் விமர்சனம் சொல்வீர்களா? என்றால் அதற்கு இதுவா மேடை. அந்த அறிவு எனக்காவது இருக்க வேண்டாமா? இங்கே ஒரு புதிய அனுபவத்தை தமிழகம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இவர்கள் எல்லாம் அதற்கு முன்னோடிகளாக விளங்குவார்கள். சரித்திரம் சொல்லும் இங்கே வந்துள்ள பத்திரிகை ஆசிரியர்கள் எல்லாம் காட்டிய கண்ணியம், அவர்கள் செய்த கடமை, அவர்கள் காண்பித்த கட்டுப்பாடு ஏற்கனவே கேட்டவை தான். ஆனால் அதனை செயல்படுத்தி காட்டி இருக்கிறார்கள் இந்த பத்திரிகையாளர்கள் வெவ்வேறு கருத்துடையவர்களாக இருப்பினும். அந்த கூட்டத்தில் அமரும் பாக்கியத்தை பெற்றே ஆகவேண்டும் என்ற ஒரு பேராசையுடன் வந்தவன் நான். இன்னொரு வி‌ஷயத்தை இந்த மேடையில் வைப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

அரசியலே பேசாமல் போய்விட்டார் என்று வையக்கூடாது அல்லவா? அதற்காக. இதோடு முடிந்தது இந்த திராவிடம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நான் ஒரு பேட்டியில் சொன்னேன். ஜன கன மன பாட்டில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை இது இருக்கும். இதற்கு அடுத்த கட்டம் செல்கிறேன். திராவிடம் என்பது இங்கே தமிழகம், தென்னகத்தோடு மட்டும் நின்றுவிட்டது என்று நினைப்பவர்களுக்கு கொஞ்சம் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றியும், மானுடவியல் பற்றியும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு படித்து தெரிந்ததால் அல்ல, சொல்ல கேட்டதால். நாடு தழுவியது இந்த திராவிடம். சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து மெதுவாக தள்ளிக்கொள்ளப்பட்டு வந்து, கடைசில் ‘டிக்காசன்’ போல படிந்து நிற்கிறது. இந்திய இயக்கத்தை தடை செய்ய முயற்சி நடக்கிறது, இதை திராவிடம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்தால் நாடு நம்மை நினைவில் வைத்துக்கொள்ளும். நான் சொல்வது ஓட்டின் எண்ணிக்கையை அல்ல. மக்களின் சக்தியை.

இவ்வாறு அவர் பேசினார்.