கீர்த்தி சுரேஷ் நடிக்கும் குட்லக் சகி படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது. நாகேஷ் குக்குனூர் இயக்கி உள்ளார். சுதிர் சந்திர பத்ரி, ஷ்ராவ்யா வர்மா ஆகியோர் தயாரித்துள்ளனர். விளையாட்டை பின்னணியாக கொண்ட காதல் படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
இதில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்ணாக வருகிறார். கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி வருமாறு:-
“நமது சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறோமோ அதை நெருங்கி இருக்கிற மாதிரியான கதாபாத்திரங்கள் செய்ய மிகவும் சவுகரியமாக இருக்கும். ஆனால் புதிதாக நமது திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அதில் இருக்காது. என்னுடைய குணாதிசயங்களுக்கு எதிரான கதாபாத்திரங்களில் நான் நடிக்கும்போதுதான் சந்தோஷம் எனக்கு கிடைக்கும். இந்த கதாபாத்திரத்தை சவாலாக செய்தோம் என்ற திருப்தியும் கிடைக்கும். வாழ்க்கையில் நான் மிகவும் மென்மையானவள். திரையில் அதற்கு விரோதமாக காட்சியளிக்க விரும்புகிறேன். எல்லாவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக வைத்து இருக்கிறேன்.”
இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.