திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கிற கலைஞர்களைக் கவுரவிக்கும் பொருட்டு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘உலகாயுதா’ என்ற அமைப்பு சார்பாக தமிழ் சினிமாவில் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்திருந்தனர். ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்கத்திற்கான செலவை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார்.
இந்த தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு உழைப்பாளர்கள் தினமான நேற்று நடந்தது. இந்நிகழ்வில், இயக்குனர் சேரன், அமீர், கரு.பழனியப்பன், விஜய் சேதுபதி மற்றும் பல திரைப்பட தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். விழாவில், சினிமாவில் தொழிற்சங்க முன்னோடிகளான நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, விஜய் சேதுபதியை நடிகராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு முதல் பதக்கம் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சங்கம் சார்ந்து இயங்கக்கூடிய கலைஞர்கள் மற்றும் சங்கம் சாராமல் இயங்கும் கலைஞர்கள் ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மூத்த திரைப்பட ஆபரேட்டர் ராமலிங்கத்திற்கு, ஆபரேட்டராக பணியாற்றிய சேரனின் அப்பா பதக்கம் அணிவித்தார். விநியோகஸ்தர்கள், ஆபரேட்டர்கள், டிரைவர்கள், நடன இயக்குனர்கள், என சினிமாவின் அனைத்துத் துறைகளை சார்ந்தவர்களுக்கும் பதக்கம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பேசிய விஜய் சேதுபதி, “எல்லோருக்கும் நான் நூறு சவரன் கொடுத்தேன் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் கொடுத்தேன்? தெரியுமா? இங்க இருந்துதான் நான் எடுத்தேன். அதனாலத்தான் கொடுத்தேன். இன்றைக்கு எனக்கு கிடைக்கிற மரியாதை எல்லாம் நடிகர் விஜய் சேதுபதிக்கு கிடைக்கிற மரியாதைதான். என்னை ஒரு நடிகனாக அங்கீகரித்திருக்கிற இந்த சினிமாவுக்கு நான் செய்கிற நன்றிக்கடனாக மட்டுமே இதை பார்க்கிறேன்” என்றார்.
கடைசியில், “எல்லோருக்கும் தங்கம் கொடுத்து அழகு பார்த்த என் அண்ணன், நண்பர் எஸ்.பி.ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்க ஆசைப்படுகிறேன்” என்று சொல்லி அவருக்கும் பதக்கம் வழங்கி, நிகழ்ச்சியை நிறைவாக்கினார் விஜய் சேதுபதி.