இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “காலா” திரைப்படம் உலகமெங்கும் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாகிறது. இருப்பினும் கர்நாடகா மற்றும் சில நாடுகளில் வெளியாவதில் மட்டும் இன்னும் சிக்கல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தூத்துக்குடியில் ரஜினி பேசியதை வைத்துக் கொண்டு சிலர், “காலா” திரைப்படத்தை புறக்கணிப்போம் எனவும் பேசி வருகிறார்கள்.
மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன், “காவிரியை விட காலா முக்கியமில்லை” என பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், “காலா” விளம்பரப் பணிகளுக்காக படக்குழுவினரோடு ரஜினிகாந்த் நேற்று ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களாஇ சந்தித்தார். அப்போது,
“நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். நிச்சயமாக இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். காவிரி விவாகரத்தை பொறுத்தவரை பேச்சுவார்த்தையின் மூலமாகமும் நல்ல முடிவை எட்டலாம். கர்நாடகாவில் “காலா” திரைப்படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என நம்பிக்கை இருக்கிறது. தூத்துக்குடி சம்பவத்திற்கு நான் பேசியவை எல்லாம் பொதுவெளியில் இருக்கிறது. அதில் நான் என்ன தவறாக இருக்கிறது என நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். சினிமாவில் நடிக்க வந்து 43 ஆண்டுகள் ஆகிவிட்டது, இனிமேலும் விளம்பரத்திற்காக ஸ்டண்ட் அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என பத்திரிக்கையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மேலும், “காலா திரைப்படத்திற்கு தமிழகத்தில் இருக்கிற எதிர்ப்பலைகளை எப்படி பார்க்கிறீர்கள்?” என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு,
“நான் எதிர்பார்த்ததை விட குறைவாகத்தான் இருக்கிறது” என கிண்டலாக பதிலளித்தார்.