இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்ற திடுக்கிடும் புகாரை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவும் மாறி உள்ளது. ரகுமானுக்கு ஆதரவாக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த ஒலிக் கலவைக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, தன்னையும் பாலிவுட் திரையுலகினர் ஒதுக்கியதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பாலிவுட் இயக்குனர் சேகர் கபூரை டேக் செய்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ஆஸ்கர் விருது வென்ற பிறகு இந்தி பட உலகம் என்னை விலக்கி வைத்தது. யாரும் எனக்கு வாய்ப்பு தரவில்லை.
இதனால் நிலைகுலைந்து விட்டேன். சில தயாரிப்பு நிறுவனங்கள் என் முகத்துக்கு நேராகவே, நீங்கள் எங்களுக்கு தேவையில்லை என கூறினர். இருந்தும் நான் கலையுலகை விரும்புகிறேன். அதுதான் எனக்கு கனவு காண கற்றுத்தந்தது. என்மீது நம்பிக்கை உள்ளவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு வாய்ப்பு தருகிறார்கள்.
எளிதாக என்னால் ஹாலிவுட்டுக்கு சென்றிருக்க முடியும். ஆனால் நான் செல்லவில்லை. போகவும் மாட்டேன். இந்தியாவில் பணியாற்றிதான் ஆஸ்கர் வென்றேன். அமெரிக்காவில் உள்ள மோஷன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ் விருதுக்கு 6 முறை பரிந்துரைக்கப்பட்டு வென்றிருக்கிறேன். மற்றவர்களை விட எனது மக்கள் மீது, எனக்கு நம்பிக்கை உள்ளது” என பதிவிட்டுள்ளார்.