full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எதை வேண்டுமானாலும் செய்வேன் : விஷால் ஆவேசம்

சென்னையில் பரபரப்பைக் கிளப்பிய நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தற்போது தமிழ் சினிமாவாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கிறார். ‘உளவுத்துறை’ படத்தை இயக்கிய எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டில் நடிகர் விஷால், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது நடிகர் விஷால் பேசும்போது, இன்றைக்கு சினிமாவை ஆபத்து பல வழிகளில் சூழ்ந்துள்ளது. அதைத் தடுப்பதற்காகத்தான் சினிமாவை நிறுத்தி வைப்போம் என்று முடிவு எடுத்தோம். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு வந்தது. விஷால் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றார்கள். நான் எந்த முடிவையும் தனியாக எடுப்பது கிடையாது. அனைவரையும் கலந்து ஆலோசித்துதான் அனைத்து முடிவுகளையும் அறிவிக்கிறேன்.

தியேட்டர்களில் ஆன்லைன் முன்பதிவுக்கு டிக்கெட் விலையைவிட கூடுதலாக ரூ.30 வசூலிக்கிறார்கள். அதில் ஒரு ரூபாய்கூட தயாரிப்பாளருக்கு வருவதில்லை. நாமே ஆன்லைனில் டிக்கெட்டுகளை விற்போம் என்றால் அது கூடாது என்று ஒரு எதிரி கூட்டம் உருவாகிவிடுகிறது.

கியூப் கட்டணம் ரூ.20 ஆயிரம் வசூலிக்கிறார்கள். ரூ.5 ஆயிரத்துக்கு செய்து தருகிறேன் என்று ஒருவன் அலுவலக வாசலிலேயே காத்துக் கிடக்கிறான். ஆனால் அவனை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இனிமேல், நான் எதைக் கண்டும் அஞ்சப்போவதில்லை. வருகிற டிசம்பர் மாதத்திற்கு எந்த ஒரு தயாரிப்பாளரும் நஷ்டத்தை சந்திக்காமல் லாபத்தை சந்திக்கிற நிலைமையை உருவாக்கி காட்டுவேன். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று ஆவேசமாக பேசினார்.