full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

சனம் ஷெட்டி மீது எந்த வழக்கும் தொடர மாட்டேன் – தர்ஷன்

சனம் ஷெட்டி எனக்கு ஆரம்பகாலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு நிறைய உதவி புரிந்து இருக்கிறார்; அவர் மீது எந்த வழக்கும் தொடர மாட்டேன் – தர்ஷன்
 பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அதுகுறித்து விரிவான விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:

2016-ல் சென்னைக்கு வந்தேன். நான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, என்னுடைய இருசக்கர வாகனத்தை விற்று விட்டு தான் சென்னைக்கு வந்தேன். வந்ததும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் ஆறு மாத காலம் உதவியாளராக பணிபுரிந்தேன். அங்கங்கே நடக்கும் ஆடிஷனில் கலந்து கொண்டு விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். பிறகு வில்லனாக ஒரு படத்தில் நடித்தேன்.

2017 தான் சனம் ஷெட்டியை சந்தித்தேன். அப்போது என்னை அவரது முகநூலில் சேர்த்தார். அதன் பிறகு என்னுடைய ஒவ்வொரு படத்தின் புகைப்படங்களை பார்த்து வாழ்த்து செய்தி அனுப்புவார். ஒருமுறை நான் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நாயகன் இன்னும் முடிவாகவில்லை.நீங்கள் நாயகனாக நடிக்க ஆடிஷன் வாருங்கள் என்று முகநூலில் செய்தி அனுப்பினார். நான் ஆடிஷனில் தீர்வான பிறகுதான் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் நான்தான் என்று கூறினார். 35 நாள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அந்த சமயத்தில் அவருக்கு என்மீது ஒருமுக காதல் இருந்துள்ளது. 2018 முதல் நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். ஆனால் இருவரின் பணியில் இடையூறு வரும் என்பதால் வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்தோம். இதற்கிடையே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாங்கள் நடித்த படமும் பாதியில் நின்றுவிட்டது. எனக்கும் விசா முடிவடைந்ததால் ஸ்ரீலங்காவிற்கு திரும்பிவிட்டேன். சுமார் 8 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்காக இந்திய அழைத்தார்கள் வேலைவாய்ப்பு விசாவில் வந்தேன். இங்கு வந்த பிறகும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்கள் அதுவரை எனது செலவுக்கு எனது அண்ணன் தான் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். அவ்வப்போது எனக்கு கிடைக்கும் விளம்பர வாய்ப்பை பயன்படுத்தி வருமானம் ஈட்டினேன். சனம் ஷெட்டி அவ்வப்போது எனது பெயரை முன்னெடுத்து எனக்கு வாய்ப்புகள் வாங்கி கொடுப்பார். அவர் மிகப்பெரிய உதவிகளை வழங்கி இருக்கிறார் என்ற உணர்வு எனக்கு எப்போதும் இருக்கும்.

அதன்பிறகு, இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க எங்களது சுய விவரங்களை கொடுத்து விண்ணப்பித்து இருந்தோம். என்னைவிட சனம் ஷெட்டிக்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் சந்தோசம் தான் என்று நானும் இருந்தேன். அந்த சமயத்தில் விஜய் டிவியில் போத்தீஸ் விளம்பரத்தில் நான் நடித்ததை பார்த்து என்னை தேடி கொண்டிருந்திருக்கிறார்கள். எனக்கு ரம்யாவும் சத்யாவும் நெருங்கிய நண்பர்கள். எங்களுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு ரம்யாவிடம் இந்த பையனை தான் தேடிக்கொண்டிருந்தோம் போன் நம்பரை கொடுங்கள் என்று விசாரித்திருக்கிறார்கள். அதற்கு நாங்கள் தர்ஷனின் நிச்சயதார்த்தத்திற்கு வந்திருக்கிறோம். முடிந்ததும் அனுப்புகிறோம் என்று ரம்யா கூறியிருக்கிறார். இந்த விவரங்களை நான் சனம் ஷெட்டியிடம் கூறியபோது, அவர் நமக்குள் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று பத்திரிக்கைகளுக்கு தகவல் அளித்து விடுங்கள். இல்லையென்றால் எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று என் மீது கோபப்பட்டார். அப்போது, சத்யாவும் ரம்யாவும் எங்களுடன் தான் இருந்தார்கள். அவர் கூறிய பிறகுதான் நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற வில்லை என்று நான் பேட்டி அளித்தேன்.

 எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என் பெற்றோருக்குத் தெரியாது ஏனென்றால் எனக்கு ஒரு தங்கை இருப்பதால் அவர் திருமணம் முடியும் வரை எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது தெரியாமல் இருக்க வேண்டும். அதற்கு சம்மதித்தால் நான் செய்து கொள்கிறேன் என்று சனம் ஷெட்டியின் பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் சம்மதித்த பின் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பிறகு, நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும்போது சனம் ஷெட்டி, நீ யாரிடமும் இந்த விஷயத்தை கூற வேண்டாம். ஏனென்றால், வையில்ட் கார்ட் சுற்றில் நான் வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். அவருடைய மாமா அரசியலில் பெரும்புள்ளி. அவரை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆகையால் தான் ஆரம்பத்தில் நான் எதுவும் கூறவில்லை மீரா பிரச்சனை ஆரம்பிக்கும் போதுதான் எங்கள் காதலை பற்றி கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கூறினேன்.

பிறகு, அவர் நீச்சல் உடையில் பேட்டி அளித்திருந்தார். அது எனக்கு பிடிக்காமல் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டேன். அதற்கு சனம் ஷெட்டி உன்னை ஊக்குவிக்க தான் என்று கூறினார். மேலும் உனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர் பெயரும் கடவுச் சொற்களையும் கேட்டிருந்தார். நான் எனது அண்ணனும் தங்கையும் பார்த்துக்கொள்வார்கள் மற்றும் விஜய் டிவியில் வரும் விளம்பரமே போதும் என்று கூறிவிட்டேன். அதை மீறி என் அண்ணனிடம் கேட்டு உள்ளார் அவர் மறுக்க என் தங்கையைக் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். நம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு ஒரு மாதம் வரை என்னுடைய இன்ஸ்டாகிராம் முழுவதும் உபயோகப்படுத்தியது சனம் ஷெட்டி தான்.

என்னிடமும் இனிமேல் பிக்பாஸில் கலந்துகொண்ட பெண்களிடம் நீ பேசுவது இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வது கூடாது மேலும் நீ எங்கு சென்றாலும் என்னையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சிக்கு கூட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் நான் தர்ஷனின் காதலி என்னையும் அழைத்துச் செல்லுங்கள், ஹோட்டலில் எனக்கு மழை ஒதுக்குங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கான செய்தி ஆதாரம் என்னிடம் உள்ளது. அதேபோல் நான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தன்னை கதாநாயகியாக போட வேண்டும் என்றும் கூறி வந்தார். அதற்கு நான் எனக்கு இந்த கதாநாயகிதான் வேண்டும் என்று கூறும் அளவுக்கு வளரவில்லை என்று கூறினேன். இது போல் அவ்வப்போது எங்களுக்குள் சிறு சிறு விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தது.

என்னிடம் கேட்டால் மட்டுமே நான் சனம் ஷெட்டியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறுவேன் என்றேன்.

அதன் பிறகு ஒரு நாள் அவர் என்னிடம் இப்போது உனக்கு புகழ் கூடிவிட்டது ஆகையால் இன்னும் இரண்டு மாதத்தில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று அறிவித்துவிட்டு என்று கூறினார். அதற்கு நாம் ஏற்கனவே சமரசமாக பேசி முடிவெடுத்து விட்டோம் இப்போது நான் மூன்று படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன் ஆகையால் இப்போது நான் கூற மாட்டேன் என்றேன். அதற்கு இன்னொரு தயாரிப்பாளர்களிடம் சென்று இவரை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார். அப்போதுதான் நான் இவரை விட்டு விலகுவது என்று முடிவெடுத்தேன். அதை அவரிடம் கூறியபோது நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். அந்த செய்தியின் ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.

அதோடு நில்லாமல் நான் உன் அம்மாவிடம் நம் காதலைப் பற்றிக் கூறப் போகிறேன் என்றார். என்னை சந்தித்து விட்டு தான் என் அம்மாவை சந்திக்க சென்றார். என்னம்மா நீங்கள் இருவரும் காதலிப்பதால் எங்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், தர்ஷனின் தங்கைக்கு திருமணம் செய்துவிட்டு உங்கள் திருமணத்தை நடத்துகிறோம் என்று கூறினார்.

அவர் விசா சம்பந்தமாக சுமார் ரூ.3 லட்சம் எனக்கு அளித்து இருந்தார். அதை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் அவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நிச்சயதார்த்த செலவு ரூ.2 1/2 லட்சம் தவிர வேறு எந்த பண உதவியும் அவரிடமிருந்து நான் பெறவில்லை.

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது அவர்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னுடன் பழகிய சில பெண்களிடம் அவர் நேரடியாக சென்று மிரட்டி இருக்கிறார். அவர்களுக்கு பிரச்சினை வரும் என்ற காரணத்தால், அவர்கள் பெயரை வெளியே சொல்ல விரும்பவில்லை. அவர்களின் இன்ஸ்டாகிராம் அடையாளத்தை தடை செய்ததும் அவர்தான்.

மேலும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த சமயத்தில் ரம்யா சத்ய திருமணத்திற்கு அவருடைய முன்னாள் காதலனுடன் தனியறையில் இருந்திருக்கிறார். அதற்கான ஆதாரம் மற்றும் இன்னும் அவரைப்பற்றிய பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு பல பெண்களிடம் தொடர்பு இருக்கிறது என்று சனம் கூறியுள்ளார் அதற்கான ஆதாரம் இருந்தால் அவரை கொடுக்க சொல்லுங்கள். சரி நிதம் நான் எங்கள் காதலை கூறிய பிறகு அவரும் அதை புரிந்து கொண்டு விலகி விட்டார். ஆனால் சனம் ஒரு நிகழ்ச்சியில் எங்களுக்கு இடையே ஷெரீன் தான் தடையாக இருக்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அது முற்றிலும் உண்மை அல்ல. நானும் ஷெரீனும் நல்ல நண்பர்கள் மட்டும் தான்.

மேலும், நான் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியிருக்கிறார். அதுவும் உண்மையல்ல. பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் சென்று தன்னை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அவர்கள் இது அவருடைய தனிப்பட்ட விஷயம். இதற்கும் அவர் நடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். இவ்வளவு நடந்த பிறகு அவரை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை.

எனக்கு அவர் நிறைய உதவிகள் செய்து இருப்பதால், அவர் மீது நான் எந்த வழக்கும் தொடர மாட்டேன். அவர் கொடுத்த வழக்கில் ஆணையர் கேட்பின் என்னிடம் உள்ள ஆதாரத்தை சமர்ப்பிப்பேன்.

இவ்வாறு தர்ஷன் தனக்கும் சனம் ஷெட்டிக்கும் இருந்த உறவைப் பற்றி தெளிவாக விளக்கம் அளித்தார்.