சாம்பியன்ஸ் கோப்பை 2–வது அரைஇறுதியில் இந்தியா–வங்காளதேசம்

General News

இங்கிலாந்தில் நடந்து வரும் 8–வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டி விட்டது.

பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணியாக வர்ணிக்கப்படும் இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. அடுத்து இலங்கையுடன் 321 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்ததால் மெத்தனப் போக்கே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மிகவும் எச்சரிக்கையாக ஆடிய இந்திய அணி எதிரணியை 191 ரன்களில் சுருட்டி அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

பர்மிங்காமில் இன்று நடைபெறும் 2–வது அரைஇறுதியில், ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் இந்தியா, ‘ஏ’ பிரிவில் 2–வது இடத்தை பெற்ற வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இந்தியாவும், வங்காளதேசமும் இதுவரை 32 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 26–ல் இந்தியாவும், 5–ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. சாம்பியன்ஸ் கோப்பையில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.