பெண்களை படிக்க வைக்க விரும்பாத திருநெல்லி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகி சுவாதி நாராயணன். ஆனால், சுவாதி நாராயணனுக்கோ நன்றாக படித்து சமூகத்தில் சாதிக்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறாள். இதற்கு அவளது அப்பாவும் ஆதரவு கொடுத்து வருகிறார். ஆனால், அவளது அம்மாவுக்கோ விருப்பமில்லை. இந்நிலையில், சுவாதி நாராயணனுக்கு கடைசி தேர்வு எழுதும் நேரத்தில் பல தடைகள் வருகிறது. தடைகள் அனைத்தையும் தாண்டி சுவாதி தேர்வு எழுதினாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சுவாதி நாராயணன் முழு படத்தையும் தனது தோளில் சுமந்து தாங்கி சென்றிருக்கிறார். படிப்புக்காக போராடும் மாணவியாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார். தனது படிப்புக்கு ஆதரவாக இருக்கும் அப்பா உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவமனையில் இருக்க, அவரது ஆசையை நிறைவேற்ற தேர்வு எழுத செல்லும் சுவாதிக்கு ஏற்படும் தடங்கல்களை எதிர்கொள்ளும் காட்சிகளில் எல்லாம் பரிதாபப்பட வைக்கிறார். தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். இவருடைய உழைப்புக்கு சிறந்த பலன் கிடைக்க வாழ்த்துக்கள்.
நாயகியின் முறைமாமனாக வரும் ஜெனிஷ், கன்னட நடிகர் கிங் மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கிராமங்களில் கல்வி கற்பதற்கு குழந்தைகள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார் இயக்குனர் பீனிஸ் ராஜ். இப்படம் மாணவர்களுக்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கி இருக்கிறார்.
சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் சுறுக்கமாக சொல்லியிருக்கலாம். நீண்ட காட்சிகள் பார்ப்பவர்களுக்கு சற்று பொறுமையை இழக்க செய்கிறது. ஆனால், இவரின் இந்த புதிய முயற்சிக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.
விஷ்ணு வி.திவாகரனின் இசை படத்திற்கு பெரும் பலம். கதைக்கேற்ற உணர்வை இவரது இசை கொடுத்திருக்கிறது. சந்தோஷ் அஞ்சலி ஒளிப்பதிவு அருமை.
சினிமாவின் பார்வையில் ‘இலை’ சிறப்பு.