full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

கலைத்தாயின் தலைமகனைக் கொண்டாடுவோம்!

உயிர் ஜனிக்கும் நொடியில் மழலையின் முதல் அழுகுரல் தாய்க்கு இசைதான். மரணம் என்பதை உறுதி செய்து கொள்ள முன்னாளில் மனிதன் பயன்படுத்திய தோல்பறை அதிர்வும் இசை தான். பிறப்பின் ஆதி முதல் இறப்பின் அந்தம் வரை மனித வாழ்வின் ஒவ்வொரு அணுப் பொழுதிலும் இயைந்திருப்பது இசையன்றி வேறேதும் இல்லை.

அப்படி இசையை பிறப்போடும் இறப்போடும் நேரடியாகத் தொடர்புபடுத்திக் கொள்ள நம்மையெல்லாம் ஒருவர் பழக்கப்படுத்தினார் என்று பெருமை கொள்ள வேண்டுமெனில், அது இசைஞானி இளையராஜா என்பவராகத் தான் இருக்க முடியும்.

1976-களுக்கு முன்பு தமிழர்கள் அறிந்திருந்த, ரசித்த இசையின் வடிவம் என்பது மேட்டுக்குடி வர்க்கத்திற்கான வடிவத்திலேயே இருந்து வந்தது. அதனை உடைத்து இசையினை, வயல் வரப்பின் புல் நுனி வரை கொண்டு சேர்த்தவர் இசைஞானி இளையராஜா. “அன்னக்கிளி” திரைப்படத்திற்கு முன், பின் என்று தமிழ்த்திரையிசையை பிரித்து வைத்துப் பார்க்கும் போது அது எளிதில் புலப்படும்.

அதுநாள் வரை உறங்கிக் கிடந்த தமிழகத்தின் கிராமங்கள் எல்லாம், இளையாராஜாவின் இசைகேட்டு புத்துயிர் பெற்று கூத்தாடியது. இந்த இசை நமக்கானது, நம் மண்ணுக்கானது என்று இளையாராஜா வீதி வீதியாக தூக்கித் திரியவில்லை. விளம்பரங்கள் செய்து தம்பட்டம் போடவில்லை. காற்றில் பரவுகின்ற மகரந்தத் துகள்கள், இன்னொரு மலர் மீது பட்டு காயாவது போல ராஜாவின் இசை காற்றில் மிதந்து உயிர்களில் கலந்தது.

தமிழர்களின் வாழ்வும், இளையராஜாவின் இசையும் “செம்புலப் பெயல் நீர் போல” பிணைந்ததாய் கிடக்கிறது. அழ வைக்க, சிரிக்க வைக்க, கொண்டாட வைக்க இளையராஜாவின் பாடல்களால் முடிகிறதோ இல்லையோ, ஒருவனை துயில் கொள்ளச் செய்ய இளையராஜாவின் பாடல்களால் மட்டுமே முடியும்.

பிறப்பிற்கும் திறமைக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்பதற்கு இந்த உலகினுக்கு எடுத்துக் கூற இளையராஜாவைத் தாண்டி வேறு சிறந்த உதாரணமொன்று இருக்க முடியாது. எங்கேயோ சாதாரணமான விளிம்புநிலை மனிதருக்கு மகனாகப் பிறந்து, இன்று இசையை நேசிக்கிற.. இசையைக் கொண்டாடுகிற ஒவ்வொருவராலும் மகானாகப் பார்க்கப்படும் நிலைக்கு உயர்ந்து நிற்கிறார் என்றால் அது சாதாரணமானதல்ல.

இளையராஜாவை இன்னாருக்கானவர் என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைப்பதென்பது, இசையினைக் கமண்டலத்தில் அடைத்துக் கைகளில் சுறுக்கிக் கொள்வது போலானது தான். காற்று, வானம், நிலம் போல இளையராஜா எல்லோருக்குமானவர். அவரது இசை எல்லோருக்குமானது. அவரது பெருமை ஒட்டுமொத்த இந்த மண்ணுக்கானது.

பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் மட்டுமல்லாமல் ஆஸ்கர் கூட இளையாராஜாவிற்கு கிடைக்கலாம். அவை இளையராஜாவிற்கானவை, அவரது திறமைக்கானவை. நமக்கும்,
நம் ஒட்டுமொத்த தமிழ் மண்ணிற்கும் “இளையராஜா” என்ற மனிதன் தான் விருது, பெருமை எல்லாமே.

விமர்சனங்களையும், காழ்ப்புணர்ச்சியைத் தூக்கிக் கடாசிவிட்டு இளையராஜாவை, இளையராஜாவின் இசையைக் கொண்டாடுவோம்!!