“குடிசையிலிருந்த வானொலியை விற்றுவிட்டு சென்னைக்கு வந்த ஞானதேசிகன் என்கிற இளைஞன், தமிழகத்தைத் தாண்டியும் ஒட்டுமொத்தமான வானொலிகளுக்கும் உயிரூட்டினார் என்பதே ‘இசைஞானி, இசைத் தலைவன், ராகதேவன்’ இளையராஜா என்பவருடைய வாழ்வின் எளிமையான சுருக்கம்.
திரும்பிப் பார்த்தால் இன்றிலிருந்து சரியாக 43 ஆண்டுகளுக்கு முன்புதான் “இளையராஜா” என்கிற சக்ரவர்த்தியின் சாம்ராஜ்யம் ஆரம்பிக்கிறது. திரையிசையில் இப்படியும் கிராமிய மணத்தை வீசச் செய்யலாமா? என உலகின் புருவங்களை உயரச் செய்த “அன்னக்கிளி” திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, அதன் பிறகு செய்தவை எல்லாம் இனி வேறு யாராலுமே செய்ய முடியாத சாதனைகள்.
ஆசியாவிலிருந்து சிம்பொனி இசையை உருவாக்கிய முதல் இசையமைப்பாளர் என்கிற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரரான இளையராஜா, இதுவரையில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். இதுவரையில் மொத்தம் 5 தேசிய விருதுகள் வாங்கியிருப்பவருக்கு, சமீபத்தில் தான் இந்திய அரசு “பத்மவிபூஷன்” விருதளித்துக் கவுரவித்தது.
உலகின் பல நாடுகள் இளையாராஜாவை தங்கள் நாட்டு இசைக் கலைஞனைப் போல கொண்டாடுகிறார்கள் என்றாலும், தமிழக மக்களின் ஒரே இளைப்பாறுதல்.. போதையேறுதல்.. மருத்துவம் பெறுதல் எல்லாமே இளையராஜா தந்திருக்கிற பாடல்களிடத்தில் தான். இயற்கையின் ஈடு இணையற்ற செல்வங்களுக்கு ஈடானது இளையராஜா இந்த தமிழ் சமூகத்திற்குத் தந்திருக்கிற இசைக் களஞ்சியமும்.
ஓசைகளின் வழியே இந்த உலகத்தை ஆளலாம் என்கிற மாய வித்தையை கரைத்துக் குடித்தவரான இளையராஜா பாடல்களுக்கு மட்டுமில்லாமல், பின்னணி இசை கோர்ப்பதிலும் இன்னும் பல தலைமுறைகளுக்கான முன்மாதிரி. “மகேந்திரன் – பாரதிராஜா – பாலச்சந்தர் – பாலு மகேந்திரா – மணி ரத்னம்” என தமிழ் சினிமாவின் அடையாளமாய்த் திகழும் இயக்குநர்களின் எண்ணங்களை இசையாய் மாற்றி காற்றில் மிதக்க விட்டவர் அவர்.
மரங்களைடையும் பறவைகள் ஒலி, உடைந்த கட்டிலைச் சீர் செய்யும் தச்சனின் உளியோசை, சலவைத் தொழிலாளி ஓங்கி அடிக்கும் துணி கல்லில் படும் ஓசை, கடும்பாறையொன்று உழைப்பாளனின் பாறை பட்டுத் தெறித்து உடையும் சத்தம் என சூழலை ஒத்தும்.. தாய்க்கும் மகனுக்கும், தந்தைக்கும் மகளுக்கும், காதலனுக்கும் காதலிக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும் என உறவுகளை ஒத்தும்.. இசைத்து இசைத்து காற்றில் அலைய விட்டிருக்கிற ராகங்கள் கணக்கிலடங்காதவை. ஈடு இணையற்றவை.
காலங்கள் மாறலாம்.. தலைமுறைகள் மாறலாம்.. ரசிகனின் மனநிலையும், ரசிக்கும் தன்மையும் மாறலாம்.. ஆனால் கோட்டையும் இல்லாமல் கொடியும் இல்லாமல் ராஜா இந்த காற்றுவெளியை ஆண்டு கொண்டுதான் இருப்பார் எப்போதுமே!!