இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் : சமரசம் பேச சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு
தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வந்தார். இந்த இடத்தில்தான் பாடல் பதிவு, இயக்குனர்கள் சந்திப்பு என அனைத்து பணிகளையும் இளையராஜா செய்து வந்தார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோவின் தற்போது இயக்குனராக இருக்கும் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த கட்டடம் மூடப்பட்டது.. இதன் காரணமாக இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவிற்கு செல்லாமல் இருந்தார். இளையராஜாவின் பணிகளும் முடங்கின.
இளையராஜாவுக்கு ஆதரவாக சமரச பேச்சுவார்த்தைக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், ஆர்.கே.செல்வமணி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் சென்றிருக்கிறார்கள். ஆனால், இவர்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வகத்தினர் உள்ளே அனுமதிக்காததால், லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தற்போது பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், ஆர்.கே.செல்வமணி, ரமேஷ் கண்ணா இவர்கள் 5 பேரை சுமூக பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.