full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர் சேத்தன்!

 
 
 
 அடர்த்தியான பாத்திரங்கள் ஆயிரக்கணக்கான எபிசோட்கள் என்று தனக்கென ஒரு தரமான நாற்காலி தயாரித்து அமர்ந்திருந்தவர் நடிகர் சேத்தன். 
 
‘மர்மதேசம் ‘தொடரில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் தூரதேசம் முதல் தூந்திரப் பிரதேசம் வரை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது .
சேத்தன் தன் ராஜாங்கத்தைப் பெரிய திரையிலும் விரிவாக்க விரும்பினார்.’தாம் தூம்’ படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னடம் என்று 50 படங்கள் முடித்துவிட்டார்.இருந்தாலும் அவருக்குள் ஓர் ஏக்கம் உள்ளது. அவரை ஒரு வட்டத்தில் அடக்க நினைக்கிறது திரையுலகம். ஆனால் காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி என்கிற கனவுடையவர் சேத்தன்.
 
இதோ அவரே பேசுகிறார்.
“நான் டிவியில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்த போது என்னை வலைவீசித் தேடி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவா சார் தான். அந்தப் படம் ‘தாம் தூம்’ . அதில் கதாநாயகனின் மாமா பாத்திரம். அப்போது என் டைமிங் முக பாவனைகளைப் பார்த்து உங்களுக்கு காமெடி நல்லா வரும் போல இருக்கே? என்றார்.ஆமாம் சார் அப்புறம் ஏன் சார் என்னை சீரியசாக் காட்ட முயற்சி செய்கிறீர்கள் என்றேன். அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ‘மர்மதேசம்’ தொடர் செய்து வச்சிருக்கிற வேலை இது. என்றார். அந்தளவுக்கு ‘மர்மதேசம்’ தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அடிப்படையில் எனக்கு  நகைச்சுவையுணர்வு அதிகம்  உண்டு. ஆனால்  சொன்னால் யாரும் இதை நம்ப மாட்டேன் என்கிறார்கள்.
 
நான் முதலில் ஒப்பந்தமான படம் ‘தாம் தூம்’ என்றாலும் முதலில் வெளியான படம்’ பொல்லாதவன்’. அதன் பிறகு நிறைய படங்கள் .
நான் நடித்தவற்றில் குறிப்பிட்டுப் பெருமைப்பட வைத்த படம் Revelations. இது நான் நடித்து 2016 ல் வெளிவந்தது.இந்தப் படம் மும்பை, கல்கத்தா, புனே என்று பல வெளியூர்களில் திரையிப்பட்டு பலரின் பாராட்டுகளைப்  பெற்று நான் மகிழ்ந்த திரைப்படம் என்பேன்,
கடைசியாக வந்த படம் ‘தமிழ்ப்படம் . 2. ‘அதே இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர்.
.
எனக்கு பாசிடிவ் நெகடிவ் காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கு நாசர் சார் தான் முன்னோடி. அவர் எல்லாமும் ஏற்று நடிப்பார். எந்த வட்டத்திலும் சிக்காததால்தான்  அவரால் காலம் கடந்து நிற்க முடிகிறது.
நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன்.” என்கிறார்.
 
 
 
இவரது மனைவி தேவதர்ஷினி மகள் என எல்லாருமே நடிக்கிறார்களே..?
 
” என் மனைவி தமிழ் தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள்’ 96′ படத்தில் நடித்தார். இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி யிருக்கிறது. பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். சினிமா வே குடும்பம். குடும்பமே சினிமா என்றிருக்கிறோம்.” என்கிற சேத்தன் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப்  படத்தில் பாரதிராஜா , சசிகுமாரு டன் நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு பபங்கள் உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார்.