full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376

 

பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாக கொண்டு வெளியாகி  வெற்றிபெற்றும் வருகின்றன.  இது தமிழ்சினிமாவில் நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத்தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. அட்டக்கத்தி படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ரசிகர்களிடையே பிடித்துள்ள நந்திதா ஸ்வேதா இதில் நாயகியாக நடித்து வருகிறார். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதாம். நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தகவல். சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும்,  அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். நடிகை விஜயசாந்திக்குப் பிறகு சண்டைக்காட்சிகளில் அசாத்தியமாக நடித்திருக்கும்  நடிகை நந்திதா ஸ்வேதா தான் என்ற பேச்சு இந்தப்படம் வந்தபின் இண்டஸ்ட்ரி எங்கும் கேட்கும் என்கிறார்கள்.

 

ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில்  உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. இப்படி இப்படத்தின் தலைப்பிலே  பெண்கள் மீதான  அக்கறை தெரிகிறது. அதுவே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய k.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக S.பிரபாகர் படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏற்காடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக  நடைபெற்று வருகிறது