நவம்பர் பதினைந்தாம் தேதியில் தமிழகத்தில் பல முக்கியமான இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தத் திட்டமிட்டு உத்தரபிரதேச சிறையிலிருந்து தப்பிக்கும் மிக மோசமான பயங்கரவாதி. அம்மா, இரண்டு தங்கைகள் அவர்களின் நடுத்தர வர்க்கக் கனவுகளோடு சென்னையில் மென்பொருள் பொறியாளனாக இருக்கும் ஒருவன். அவன் அசிஸ்டண்ட் கமிஷ்னரின் தங்கையை காதலிக்கிறான். அந்த போலீஸ் அண்ணன் திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தினால், அவளை நவம்பர் பதினைந்தாம் தேதி பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். குழந்தைகளை மகிழ்விக்கும் என்பதால் குறைந்த சம்பளம் என்றாலும் கூட மன நிம்மதிக்காக ‘டப்பிங் கலைஞனாக’ வேலை செய்யும் ஒருவன், நிறைமாத கர்ப்பிணியான அவனது மனைவியின் பிரசவத்திற்காக நவம்பர் பதினைந்தாம் தேதி நாள் குறித்து சென்னையில் இருந்து சொந்த ஊருக்குப் போக முடிவெடுக்கிறான்.
இந்த மூன்று பேரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்களாக மாறிப் போகிறார்கள். காவல்துறை மூன்று பேரையுமே குற்றவாளிகளாக்கித் தேடலைத் தொடங்குகிறது. அந்த பயங்கரவாதி குண்டுவெடிப்பை நிகழ்த்தினானா? அந்த இளைஞன் காதலியைத் திருமணம் செய்தானா? மற்றொருவன் மனைவியின் பிரசவத்திற்கு குறித்த நேரத்திற்கு சென்றானா? என்பதே பரபரப்பான மீதி கதை.
அட்டகாசமான ஆக்சன் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம். தேவையில்லாத இடங்களில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருக்கும் காமெடிகளால், அந்த பரபரப்பில் நம்மால் ஒன்றிப்போக முடியவில்லை. படத்தில் உதயநிதியை விட சூரியின் கதாபாத்திரமும், அவரது மனைவியாக நடித்திருப்பவரின் கதாபாத்திரமுமே அழுத்தமானதாக, கலங்க வைக்கக் கூடியதாக வந்திருக்க வேண்டியது. ஒருவேளை அப்படி நடந்துவிடக் கூடாது என்பதாலேயே சூரியை மொக்கை பண்ணியதாக யோசிக்க வைக்கிறது.
உதயநிதி போலீசால் துரத்தப்படும் போது, அவரது தாயாராகிய ராதிகாவையும், இரண்டு தங்கைகளையும் கைது செய்து போவார்கள். அது சென்ற வருடம் நடந்த நுங்கம்பாக்கம் ரயில்நிலைய படுகொலையில் தொடர்புபடுத்தப்பட்டவரின் இரண்டு தங்கைகளை நினைவுபடுத்துகிறது. ஆனால் அந்த கைது நடவடிக்கையையும் வெறும் ஒரு காட்சியாகவே கடந்து போக வைத்திருப்பதால் அதுவும் நம்மை பாதிக்கவில்லை.
மஞ்சிமா மோகன், உதயநிதி தீவிரவாதியாக இருப்பாரோ என்று சந்தேகித்து, பிறகு மிகவும் எளிதாக நல்லவர் தான் என்று நம்புவதும் நமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதேபோல் சீரியசான கதையில் ஸ்ரீமனை போலீசாக வைத்துக் கொண்டு காமெடி செய்திருப்பதும் நம்மை ஏமாற்றியிருக்கிறது.
படத்தின் தன்மைக்கேற்ப கொஞ்சம் சீரியசான கதாபாத்திரம் டேனியல் பாலாஜியுடையது தான். ஆரம்பத்தில் வரும் அந்த ஐந்து நிமிட காட்சி முதல் படத்தின் இறுதிவரை தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நடித்துள்ளார். அதே சமயம் அவர் சம்மந்தப்பட்டக் காட்சிகளில் நிறைய லாஜிக் ஓட்டைகள்.
இறுதியாக படத்தில் “துப்பாக்கி” படத்தில் வருவதுபோல் ஒரு காட்சி வைத்திருக்கிறார்கள், உதயநிதியின் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கும் அந்த ஒரு காட்சி தான் “இப்படை வெல்லும்” என்றதற்கான காரணமும் கூட.
இமானின் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை “வழக்கம்போல” ஒகேயாகி இருக்கிறது. யாரோ ஒரு விமர்சகர் சொன்னது போல தயவுசெய்து இமான் அவரது இன்ஸ்ட்ருமெண்ட்களை மாற்றினால் பரவாயில்லை.
ஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டும் படத்தின் வேகத்திற்குத் துணை நின்றிருக்கின்றன. நகைச்சுவைக் காட்சிகள் இல்லாமல், இயக்குனர் கௌரவ் நாராயணன் துணிச்சலாக, ஒரு கம்ப்லீட் ஆக்ஷன் திரில்லராகவே இந்தக் கதையைப் படமாக்கியிருந்தால் “சிகரம் தொடு” போல அருமையான படமாக வந்திருக்கும் “இப்படை வெல்லும்”.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால், நிச்சயமாக சிரித்து மகிழ்ந்து வரலாம்