full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஈடுபாடு காட்டும் இசைஞானி

கிராமம், அதன் மண் மற்றும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த்திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’.

இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ​​சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார்.​ டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்​.

கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி. இவர் ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்திருப்பவர். இவர்கள் தவிர ‘தகராறு ‘சு​லீ​ல்​ குமார்​, அஜய் ரத்னம் , தீரஜ் ரத்னம், ரஜினி மகா தேவ​ய்​யா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இது ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதை என்று கூறலாம். அந்தக் கிராமத்தைப் போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவமதிப்பும், ஏமாற்றமும், புறக்கணிப்பும் அனுபவிக்கிற மக்கள் போலீசை எதிர்க்கிறார்கள். அவர்களா ?​ ​போலீஸா ?​ ​
யார் வெல்கிறார்கள்? என்பதே கதை.

இது ஒரு ஆக்சன் படம் என்றாலும் குடும்பத்தில் நிகழும் மனம் நெகிழவைக்கும் பாசப் பகுதிகளும் உண்டு.

இந்தக் கதையைக் கேட்ட நடிகர் கிஷோர் தனது வேறு படத்தின் தேதிகளை மாற்றி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விரைவிலேயே படப்பிடிப்பைத் தொடங்கச் சொல்லியிருக்கிறார். உற்சாகமாகப் புறப்பட்ட படக்குழுவினர், 60 நாட்களில் முழுப்படத்தையும் முடித்துவிட்டு ​திரும்பியுள்ளனர்.

இது 1980 முதல் 2000 வரை நடக்கும் கதை, எனவே அக்காலத்தின் பின்புலத்துக்காக நிறைய இடங்களைத் தேடியிருக்கிறார்கள்.

கதையின்படி களத்தூர் கிராமம் என்பது தமிழ்நாடு ஆந்திர எல்லையில் அமைந்து உள்ளதாக இருக்கும்.
ஆனால் வளர்ச்சி அடையாத இது மாதிரி கிராமத்தைக் கண்டுபிடிக்க சுமார் 130 ஊர்களைப் பார்த்துள்ளனர். எதுவும் திருப்தியாக அமையாமல் இறுதியாக புதுப்பட்டி என்கிற ஊர் சென்றுள்ளனர். அந்த ஊர் தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் உள்ளது.

சீமைக்கருவைகளை வெட்டி கரி மூட்டம் போட்டு பிழைக்கும் தொழிலை மையமாக​க்​ கொண்ட கதை​க்​களம் என்பதால் அந்த ஊர் அச்சு அசலாக கதைக்கு ஏற்றார்போல் பொருந்தியதாம்.

இது தவிர கழுகுமலை, விளாத்திகுளம், சங்கரன் கோவில், முத்தலாபுரம் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்தின் கதையை இசைஞானி இளையராஜாவிடம் கூறி ஒப்புதல் பெற்றுக் கொண்ட பின்புதான் படப்பிடிப்புக்குச் சென்றிருக்கிறார்கள். எடுத்து வந்த படத்தைப் பார்த்து மகிழ்ந்து வியந்து பாராட்டிய இளையராஜா படத்துக்கு தனி ஈடுபாடு காட்டி பின்னணி இசை அமைத்து இருக்கிறார். மூன்று பாடல்கள்​.​ அவரே ஒரு பாடலை​யும்​ எழு​தியுள்ளார். இதையே தங்கள் படத்துக்கு கிடைத்த தரச் சான்றிதழாக நினைத்துப் பெருமைப்படுகிறது படக் குழு .

படத்தில் நடிக்கும் போது நடிகர் கிஷோர் காட்டிய ஆர்வமும்​, ​ஈடுபாடும் கொஞ்சம் நஞ்சமல்ல. எல்லா அசெளகர்யங்களையும் பொறுத்துக் கொண்டு ஒரு சாதாரண தொழிலாளியைப் போல ஒத்துழைப்பு கொடுத்ததை மறக்க முடியாது என்கிறார் இயக்குநர்​ சரண் கே. அத்வைதன்​.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் புஷ்பராஜ் சந்தோஷ், இசை – இசைஞானி இளையராஜா, பாடல்கள் – இளையராஜா, கண்மணி சுப்பு, எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், நடனம் – நிர்மல், ஸ்டண்ட் – மகேஷ் ஓம் பிரகாஷ்.

களத்தூர் கிராமம், படம் ஆகஸ்டில் வெளிவரும் வேகத்தில் இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன .