“‘வானம் கொட்டட்டும்’ படத்தின் மூலம் முதல் முறையாக பாடலாசிரியராக அறிமுகமாகி இருக்கிறேன்.
கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் விளையாடுவது எனது கனவாக இருந்தது. பாடலாசிரியராக வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால், இசையின் மிகப்பெரிய ரசிகன் நான். எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆசிரியர்கள் சிலர் உள்ளார்கள். அவர்களில் மருதகாசியின் ரசிகன் நான். கண்ணதாசன், வைரமுத்து, உடுமலை நாராயணகவி, ‘பாபநாசம்’ சிவா ஆகியோரையும் பிடிக்கும். எனக்கு பிடித்த பாடல் வரிகளே அவ்வப்போது முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன்.
‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இயக்குநர் தனாவுடன் சிறந்த அனுபவமாக இருந்தது. அப்படத்தில் ‘ஈஸி கம் ஈஸி கோ.. ‘ என்ற பாடலை இயற்றினேன்.
அதில் இரண்டாவது வரி ‘கைப்பிடித்து நாம் நடக்க ஒரு உலகம் ஒதுங்கிவிடும் வா வா வா..,
வீசி வரும் பேரலையும் பதுங்கி நின்று தழுவிடும் வா வா வா..
ஆகிய வரிகளை எழுதி முடித்ததும் தனாவிற்கும், மணிரத்தினத்திற்கும் அனுப்பினேன், உடனே ஏன் இன்னும் இந்த பாடலை முழுதாக முடிக்கவில்லை என்று மணிரத்தினம் சார் கேட்டார். குறைவான நாட்களில் இப்பாடலை இயற்றி இருந்தாலும் பாடல் நன்றாக வந்திருக்கிறது. ‘யாரும் இல்லா காட்டுக்குள்ளே’, ‘பூவா தலையா’ ஆகிய பாடல்கள் இயற்றும் சமயத்தில், இனி பாடல் இயற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அதற்கேற்றாற்போல் தனா, மணிரத்தினம் மற்றும் சித்ஸ்ரீராம் ஆகியோர்களின் ஊக்கத்தால் சிறப்பாகவும், சுலபமாகவும் இப்படத்தில் பாடல்களை இயற்ற முடிந்தது.
சித் அவருடைய கோணத்தில் பாடல் வரிகளைக் கொண்டு வந்தார். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முறையை தள்ளிவைத்து புதுவிதமாக இசையை அமைத்தார். ‘பூவா? தலையா?’ பாடலை ராப் பாணியில் உருவாக்கியிருக்கிறார். அவர் இசையை ஒவ்வொரு பிரிவாக வடிவமைத்த விதம்தான் எனக்கு பாடல் இயற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தோன்ற வைத்தது.
பாடல் அமைவதற்கான சூழ்நிலை, யார் யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு அதை பிரதிபலிக்கும் விதத்தில் பாடல் வரிகளை இயற்ற வேண்டும். ஒரு பாடலாசிரியருக்கு போதிய இடைவெளியும், சுதந்திரமும் இருந்தால் மட்டுமே அப்பாடல் வரிகள் சிறப்பாக அமையும். இந்தப் படத்தில் எனக்கு அது இருந்தது. இந்த படத்தில் எனக்கு பாடல்கள் எழுத உத்வேகம் கொடுத்தது இந்த படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் தான். சித் ஸ்ரீராமின் இசை இந்தப் படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் வண்ணம் அமைந்திருக்கிறது.
குறிப்பாக, ‘யாருமில்லாத காட்டுல நான் தாண்டா ராஜா’ என்ற வரி தற்போது இருக்கும் இளைஞர்கள் பொருத்திக் கொள்ளும் படியாக அமையும். 21ம் நூற்றாண்டின் சுதந்திர இந்தியாவில் ஒவ்வொருவருக்குமென தார்மீகம், தெய்வீகம் என்று ஒரு தனித்தன்மை உள்ளது. இதை திரையரங்கில் கதையுடன் சேர்ந்து பார்க்கும்போது எல்லாரும் நன்றாக உணரமுடியும்.
எதிர்காலத்தில் பாடலாசிரியராகவே இருப்பேனா என்பது தெரியாது.
தனா என்னுடைய நல்ல நண்பர். நிறைய விஷயங்கள் இருவரும் சேர்ந்து பேசுவோம். என்னைவிட இலக்கியத்தில் புலமை வாய்ந்தவர் தனா. சித் ஶ்ரீராம் எப்போதும் அவருடைய பணியில்தான் முழு கவனத்தையும் செலுத்துவார். இந்த படம் மூலம்தான் அறிமுகமானோம். இவர்கள் இருவருடனும் பணியாற்றியது மிகுந்த ஆரோக்கியமாக இருந்தது.”
இவ்வாறு சிவானந்த் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பாடல்கள் இயற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.