ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் “குரங்கு பொம்மை” படத்தில் பாடல்கள் வெளியீடு இன்று நடைபெற்றது. இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் இயக்குநர் மனோபாலா, நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குநர் தரணி, நடிகர் சிபிராஜ், நடிகர் விதார்த், தயாரிப்பாளர், நடிகர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் மைம்கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
“குரங்கு பொம்மை” இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நான் வர விரும்புவதில்லை. வருவதில்லை. அதிலும் இது நானே நடித்திருக்கும் படம் வரமாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனாலும் இந்த படத்தின் இயக்குநருக்காக வந்தேன். இந்த படத்தின் இயக்குநர் நித்திலன், வளர்ந்து வரும் தளிர். அந்த தளிரை பாராட்டவே வந்தேன். நித்திலன் பார்க்க ரொம்ப அமைதியாக இருப்பான். அவன் மிக ஆழமான சிந்தனை உடைய இளைஞன். அவனது குறும்படம், “புன்னகை வாங்கினால், கண்ணீர் இலவசம்” பார்த்துவிட்டு அவன்மீது மிகுந்த பொறாமை கொண்டேன். அந்த அளவு திறமைசாலியான பையன். இந்த படத்தில், நான் பாரதிராஜா என்பதை ஓரமாக தூக்கி போட்டுவிட்டு நடிகனாக என் வேலையை மட்டும் செய்திருக்கிறேன். நித்திலன் நிச்சயம் மிகப்பெரிய இயக்குநராக பாராட்டப்படுவார். என் வாழ்த்துகள்.
விதார்த், மிக வீரியமான நடிகன், பெங்காலி சினிமாக்களையும் மலையாள சினிமாக்களையும் பார்க்கும்போது அந்த நடிகர்களின் மிக யதார்த்தமான நடிப்பை பார்த்து பிரமிப்பேன். விதார்த், அப்படி ஒரு நடிகன். தமிழ் சினிமாவில், நடிப்பது தெரியாமல் நடிக்கக்கூடிய ஒரே நடிகன் விதார்த். நிச்சயம் பெரிய இடத்தை பிடிப்பான். விரைவில் நடிப்பிற்காக தேசிய விருது வாங்குவான். அவனுக்கு என் வாழ்த்துகள். இந்த படத்தின் ஒட்டு மொத்த நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள் என்றார்.