full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஜே பேபி திரைப்பட விமர்சனம்

ஜே பேபி திரைப்பட விமர்சனம்!

சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜே பேபி. இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கதைப்படி ஊர்வசிக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள். அனைவருக்கும் திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். வயதான காரணத்தால் அடிக்கடி மறதி ஏற்பட்டு மற்றவர் வீட்டை பூட்டி விடுவது, யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி பிரச்சினையை கொண்டு வருவது, அடிக்கடி எதாவது வில்லங்கம் செய்வது என இருக்கிறார். இது அவரது மகன்கள் மற்றும் மகள்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதனால் அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்கின்றனர்‌. அங்கு இருப்பவர்களுடன் அன்பாக பழகுகிறார் ஊர்வசி. ஒருநாள் இவரை விட்டுவிட்டு மகன் மற்றும் மகள் வீட்டிக்கு சென்றுவிட இவர்களுக்கு தன்மீது பாசம் இல்லை என்று நினைத்து அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார். கிளம்பி சென்றவர் கொல்கத்தாவில் இருப்பதாக போலீஸ் உள்ளூர் போலீசுக்கு தகவல் தர தினேஷ் மற்றும் மாறன் இருவரும் ஊர்வசியை சென்று கூட்டி வருமாறு போலீசார் அனுப்புகின்றனர். ஆனால் அண்ணன் மாறன் மற்றும் தம்பி தினேஷ் இருவரும் ஒரு பிரச்சினையில் இருந்து பேசிக் கொள்வதே இல்லை. இப்படி இருக்கும் இருவரும் எப்படி மொழி தெரியாத ஊருக்கு சென்று தனது அம்மாவை அழைத்து வருகிறார்கள்? அவர் மீண்டும் பத்திரமாக இவர்களுடன் சேர்ந்தாரா? என்பதை கண்கலங்கும் வகையில்லப் சொல்லியுள்ளார் இயக்குனர்.

படம் முழுவதும் நம்மை ரசிக்க வைப்பது ஊர்வசியின் நடிப்புதான். பிரமாதப்படுத்தியுள்ளார். ஞாபக மறதியால் செய்யும் லூட்டிகள், தினேசிடம் அழுதுகொண்டே தனது இயலாமையை சொல்வது, இரவு ரோந்து போலீசிடம் நான் ஸ்டாலின் பிரண்ட் என சொல்லி லந்து பண்ணுவது என அதகளம் செய்துள்ளார். அதேசமயத்தில் சில காட்சிகளில் கண்ணீர் வரவழைத்துள்ளார். வயதானவர்கள் குழந்தை மாதிரி அவர்கள் செய்வது நமக்கு கடுப்பாக இருந்தாலும் அதை அவர்கள் தெரிந்து செய்யவில்லை என்பதையும் வயதானவர்களை குறிப்பாக அம்மாவை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இயக்குனர் நன்றாக சொல்லியுள்ளார்.

தினேஷ் படம் முழுவதும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். சில காட்சிகளில் இன்னும் கொஞ்சம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கலாம். அம்மாவை அடித்துவிட்டு பிறகு அதுநினைத்து அம்மாவிடம் அவர் பேசும் காட்சியில் இவரும் ஊர்வசியும் நம்மை கலங்கவைத்துள்ளனர்.

வீட்டில் இளைய மகன் கொஞ்சம் அனைத்து விஷயங்களிலும் முன் நின்று செய்வது சில அண்ணன்களுக்கு பிடிக்காது எதனால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் லொள்ளு சபா மாறன். முதல் பாதியில் அவரது டிரேட் மார்க் காமெடி அவ்வப்போது நம்மை ரிலாக்ஸ் செய்கிறது. படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களது இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

கொல்கத்தாவில் தினேஷ் மற்றும் மாறனுக்கு உதவி செய்யும் ராணுவ வீரராக நடித்துள்ளவர் உண்மையில் அம்மாவை தேடிச் சென்ற சகோதரர்களுக்கு உதவியவர் என்பதை இயக்குநர் கடைசியில் சொல்கிறார். மேலும் உண்மையில் காணாமல் போன அந்த அம்மாவை 15 நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்து அழைத்து வந்தார்கள் எனவும் சொல்கிறார் இயக்குனர்.

டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் நன்று. பின்னணி இசையும் இக்கதைக்கு தேவையானதை செய்துள்ளது.
ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கொல்கத்தாவின் தெருக்களை அப்படியே காட்டியுள்ளது. சண்முகம் வேலுச்சாமி எடிட்டிங்கில் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம். இதுபோன்ற படங்களுக்கு 2.30 மணி நேரம் என்பது சற்று அதிகம். நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். ஒரு உண்மை சம்பவத்தை அழகாக திரைக்கதையாக்கி பார்ப்பவர்களை கண்கலங்கும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் வாழ்த்துகள். மொத்தத்தில் ஜே பேபி – அம்மா. ரேட்டிங் 3.5/5.