எப்படி இருக்கிறது ஜெயிலர்? – திரை விமர்சனம்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது ஜெயிலர் திரைப்படம். படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ரஜினிகாந்த் ஒரு ஓய்வு பெற்ற ஜெயிலர். இவரது மகன் வசந்த் ரவி உதவி ஆணையராக இருக்கிறார். இவரை தன்னைப் போலவே நேர்மையாக வளர்த்துள்ளார் ரஜினி. மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள், பேரன் ரித்விக் உடன் வாழ்ந்து வருகிறார் ரஜினி. சிலை கடத்தல் செய்யும் விநாயகனின் லாரியை வசந்த் ரவி பிடித்து விடுகிறார். இதனால் அவரை கடத்தி விடுகிறார். வசந்த் ரவி கொலை செய்யப்பட்டார் என ரஜினியிடம் போலீஸ் தெரிவிக்கிறது. தனது நேர்மையால்தான் மகன் கொல்லப்பட்டான் என வருந்தும் ரஜினி எடுக்கும் முடிவு தான் படம்.
முதல் பாதியில் அமைதியான ஓய்வுபெற்ற ஜெயிலராக ரசிக்க வைக்கிறார் ரஜினிகாந்த். அவ்வப்போது யோகி பாபுவுடன் செய்யும் காமெடி சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. முதல் பாதி மெதுவாக தொடங்கி அப்படியே பரபரவென பயணிக்கிறது. ரஜினி இந்த வயதிலும் மனிதர் நெருப்பாக இருக்கிறார். இவரது ஸ்டைல், நடை எல்லாம் ரசிகர்களுக்கு விருந்து. இடைவேளை காட்சி கத்தி படத்தில் வருவது போல இருந்தாலும் சூப்பர். இரண்டாம் பாதியில் கதை எங்கெங்கோ சென்று தொங்கி நிற்கிறது. சிவராஜ் குமார், மோகன் லால் சிறப்பு தோற்றம் வெறித்தனம். தமன்னா வந்து போகிறார் அவ்வளவே.
சுனில் , தமன்னா காட்சிகள் இரண்டாம் பாதியில் சற்று தொய்வை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து வரும் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. கிளைமாக்ஸ் அட்டகாசம். ஆனால் அதிலும் இந்தியன் பட வாடை அடிக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கச்சிதம். விநாயகன் மலையாளம் கலந்து அவர் பேசும் வசனங்கள் நடிப்பு அருமை. ரஜினியின் ஃபிளாஷ்பேக் சிறப்பு. எடிட்டர் நிர்மலின் கத்தரி இன்னும் கொஞ்சம் வேலை செய்திருக்கலாம். அனிருத் இசையில் ரத்தமாரே தாலாட்டு. காவாலா குத்தாட்டம். பின்னணி இசையில் ரஜினி ரசிகனாக செய்கை செய்துள்ளார்.
நெல்சன் போன படத்தில் பட்ட அடியில் இருந்து சற்று பாடம் கற்றுக் கொண்டுள்ளார் . ஆனாலும் திரைக்கதையில் இன்னும் உழைத்திருந்தால் அனைவரும் பார்க்கும் படமாக மாறியிருக்கும். ஆனால் தற்போது ரசிகர்களுக்கான படமாக நின்று விட்டது. மொத்தத்தில் ஜெயிலர் – வின்னர் . ரேட்டிங் 3.5/5