full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்

பிரேக்கிங் நியூஸ்’ என்ற சொல் திரையில் பளிச்சிடும்போதே, என்ன செய்தி என்பதை பார்க்க எல்லோரும் ஒரு நிமிடம் நின்று கவனித்து விட்டு தான் செல்கிறார்கள் என்பது வெளிப்படையானது. இதற்கு எந்த பகுதி, மொழி என்றெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவரையும் ஈர்க்கும் சக்தி உள்ளது. அதன்படி, ஜெய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படமும் இந்த சூழலுக்கு உட்பட்டது. அந்த படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமுமே தலைப்பு செய்தியாக மாறி விடுகிறது.

ஜெய், பானு ஸ்ரீ, தேவ் கில் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் “பிரேக்கிங் நியூஸ்” படப்பிடிப்பு அதிக வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஹைலைட்டான ‘சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி’ படம் என்பதை படக்குழு உறுதிப்படுத்தினாலும், படத்தின் கதை என்னவென்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இது குறித்து கூறும்போது, “இந்த படம் ஜீவன் என்ற ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனை பற்றிய கதை. தொழில் மற்றும் குடும்பத்தினருடனான தனிப்பட்ட வாழ்க்கை மிகச்சரியாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், அநீதிக்கு எதிராகத் தூண்டப்படும் அவரது நன்மை செய்யும் குணம் அவரை பிரச்சினையில் ஆழ்த்துகிறது. அவரை மிகவும் நேசிக்கும் அவரது மனைவி ஹரிபிரியா (பானு ஸ்ரீ) அவரை தன்னால் முடிந்த அளவுக்கு மாற்றுகிறார். ஆனால் அவரது மாறாத தன்மையால் அவரிடமிருந்து விலகுகிறார். அவரது சகாக்கள் மற்றும் நண்பர்கள் அவரது அன்னிய இயல்புக்காக அவரை கைவிடும்போது அவர் மேலும் தனிமையாகிறார். தனிமையால் சிதைந்துபோன அவர், “கடவுள்” தனக்கு வேறு சில திட்டங்களை வைத்திருப்பதை அறியாமல் எந்தவித நோக்கமுமின்றி அலைந்து திரிகிறார். விண்வெளியிலஇருந்து ஒரு விண்கல் பூமியை தாக்கும் போது, ஒரு சிறு துகள் அவரது உடலில் துளைக்கும்போது எல்லாம் மாறி விடுகிறது. அவரது உயிரணுக்களில் விவரிக்க முடியாத வேதியியல் எதிர்வினைகள் நடந்து, அவரது திசுக்கள் பிறழ்ந்து, மூளையில் நியூட்ரான்கள் வினைபுரிவதால், அவர் ஒரு வெல்ல முடியாத சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். இப்போது தென்னிந்தியாவை பேரழிவிற்கு உட்படுத்த ஒரு மோசமான திட்டத்தை கொண்டு வருவதன் மூலம், வளமான நிலங்களை அழித்து, அதன் மூலம் மக்களையும், வாழ்வாதாரங்களையும் அழிக்க திட்டமிடும் மிகவும் ஆபத்தான வில்லன்களான பூரி மற்றும் உராஜ் ஆகியோர் நுழைகிறார்கள். இந்த இரட்டையர்களை அரசாங்கத்தால் கூட தடுத்து நிறுத்த முடியாது, அவர்களை விட சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். சாதாரண மனிதனாக இருந்து சூப்பர் ஹீரோவாக மாறிய ஜீவன், அவர்களின் திட்டங்களை முறியடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் என்பதாக கதை பயணிக்கிறது” என்றார்.


ஒரு திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே அதன் கதையை ஒரு இயக்குனர் வெளியே சொல்கிறார் என்று வியப்பாக இருக்கிறதா? அவரிடம் இது பற்றி கேட்டால், “இங்கு மறைக்க எதுவும் இல்லை, சூப்பர் ஹீரோ கதைகள் உருவான காலத்தில் இருந்தே இந்த வடிவத்தை அடிப்படையாக கொண்டவை தான். நாங்கள் படத்தை தொழில்நுட்ப ரீதியிலும், கதை சொல்லலிலும் சுவாரஸ்யாக சொல்ல திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் நினைத்தபடியே உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்து எங்களுக்கு முழு ஆதரவுடன் செயல்படும் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் சாரையே  எல்லா பாராட்டுக்களும் சேரும்” என்றார்.

முன்பே சொன்னபடி, பிரேக்கிங் நியூஸ் படத்தை ஒரு விசுவல் ட்ரீட்டாக கொடுக்கும் நோக்கத்தில் மொத்த படக்குழுவும் கடினமாக உழைத்து வருகிறது. வி.தினேஷ் குமார் மேற்பார்வையில் 450 சிஜி கலைஞர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். ஜானி லால் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை நாகர்கோவில் திருக்கடல் உதயம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்.