ஜமா – திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் மிக சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வருவது என்பது மிக குறைவு அதை பூர்த்தி செய்ய ஒரு மிக சிறந்த கதையம்சம் கொண்ட படமாக வந்துள்ள படம் ஜமா இயக்குனர் பாரி இளவழகன் முதல் படத்திலே தன் முத்திரையை பதித்து விட்டார் என்று தான் சொல்லணும் புதுவிதமான கதை மெய்சிலிர்க்கவைக்கும் திரைக்கதை அற்புதமான கதாபாத்திரங்கள் என்று நம்மை பிரமிக்க வைத்துள்ளார் இயக்குனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தெருக்கூத்து ஜமாவில் பெண் வேடம் போடும் நாயகன் பாரி இளவழகன் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கியமான வேடங்களை போட்டு நடிப்பதோடு, எதிர்காலத்தில் தான் இருக்கும் தெருக்கூத்து ஜமாவை வாத்தியாராக தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அந்த ஜமாவின் வாத்தியாரான சேத்தன், அவரது வளர்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அனைத்தையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து ஜமாவில் பயணிக்கும் பாரி, தான் நேசிக்கும் கலைக்காக வாழ்க்கையில் பல இழப்புகளை சந்தித்து, பல அவமானங்களை எதிர்கொண்டாலும், தனது திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கான வாய்ப்பு கிடைத்ததா?, அவர் ஏன் அந்த ஜமாவின் வாத்தியாராக வேண்டும் என்று விரும்புகிறார்? என்பதை இயல்பாகவும், தெருக்கூத்து கலை மீது சினிமா ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையிலும் சொல்வது தான் ‘ஜமா’.
தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்களைப் பற்றிய படமாக இருந்தாலும், அவர்களின் சோக கதையை சொல்லாமல், அவர்களின் இயல்பான வாழ்க்கை, அந்த கலை மீதான அவர்களின் பற்று மற்றும் அதில் முதன்மையானவராக இருக்க அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை சினிமாத்தனமாக சொன்னாலும், அதை அளவாக சொல்லி இரண்டு மணி நேரம் நம் கவனம் எதிலும் செல்லாத வகையில் படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் பாரி இளவழகன்.
எழுதி இயக்கியிருப்பதோடு, கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை எதார்த்தம் மீறாமல் சொல்லியிருப்பதோடு, அதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ஒரு ஜனரஞ்சக திரைப்படமாகவும் கொடுத்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன், கல்யாணம் என்ற கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறார். தெருக்கூத்தில் பெண் வேடம் போட்டு ஆடும் போது அவர் வெளிப்படுத்தும் உடல்மொழிகள், அவர் இயல்பாக இருக்கும் போதும் அவ்வபோது எட்டிப்பார்ப்பது, கோபம் வந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, உடல்மொழியில் எந்தவித மாற்றமும் இன்றி சிறு சிறு அசைவுகளை கூட மிக நுணுக்கமாக செய்திருக்கும் பாரி இளவழகன் சிறந்த இயக்குநர் மட்டும் இன்றி சிறந்த நடிகருக்கான விருதுக்கும் தகுதியானவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
தெருக்கூத்து ஜமாவின் வாத்தியாராக தாண்டவம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேத்தன், நாயகனுக்கு இணையாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இத்தனை வருடங்கள் இவரை தமிழ் சினிமா ஏன் பயன்படுத்தவில்லை? என்ற கேள்வியை படம் பார்ப்பவர்கள் மனதில் எழுப்பியிருக்கும் சேத்தனுக்கு இந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரிய இடத்தை பெற்று தரும் என்பது உறுதி.
நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி அதிரடியான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். கோபக்கார அப்பாவையே எதிர்த்து நிற்கும் தைரியமான பெண்ணாக கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
பாரியின் தந்தையாக நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தயாள், பாரியின் அம்மாவாக நடித்திருக்கும் மணிமேகலை, பூனை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் ரசிகர்கள் நினைவில் தங்கிவிடுகிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. குறிப்பாக தெருக்கூத்தில் இடம்பெறும் பாடல்களை தேவையான அளவு பயன்படுத்தியிருப்பதோடு, இறுதிக் காட்சியில் அந்த பாடலையே பின்னணி இசையாக பயன்படுத்தியிருப்பது, தெருக்கூத்து கலை மீது ரசிகர்களுக்கு பேரார்வத்தை தூண்டுகிறது.
ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணாவின் கேமரா கிராமத்து எளிமையை அழகாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் அதில் நடிப்பவர்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் பார்த்தா எம்.ஏ, கலை படைப்பாக இருந்தாலும், கமர்ஷியல் படங்களுக்கு நிகராக படத்தை விறுவிறுப்பாக பயணிக்க வைக்கிறார்.
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை சினிமா மொழியில் சொன்னாலும் உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கும் இயக்குநர் நாயகனின் நடிப்பை பார்த்து மனம் இறங்கும் சேத்தனை திடீரென்று மரணிக்க வைத்தது சற்று அதீத சினிமாத்தமாக இருப்பது படத்தின் குறையாக இருந்தாலும், கிளைமாக்ஸ் காட்சியில் அந்த சினிமாத்தனத்தை மறைத்து தெருக்கூத்து கலையின் ஆட்டத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி ரசிகர்களை கைதட்ட வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில், இந்த ‘ஜமா’ தமிழ் சினிமாவின் உயிரோட்டம்.