மூன்றாம் பிறை ஸ்ரீதேவியாக பலூனின் ஜனனி

News

ஜெய் – அஞ்சலி – ஜனனி ஐயர் இணைந்து நடித்திருக்கும் படம் `பலூன்’. புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் காதல் கலந்த திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் ‘பலூன்’ படம் வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ஜெய், அஞ்சலி ஜோடிக்கு இணையான ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார் ஜனனி ஐயர்.

அவரது கதாபாத்திரம் குறித்து ஜனனி ஐயர், “என்னுடைய கதாபாத்திரம் 1980-களின் பின்னணியில், கொடைக்கானலில் வாழும் ஒரு பெண்ணைப் பற்றியது. மிகவும் கட்டுக்கோப்பான, ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் `மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார்.

காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அந்த நடிப்புக்கு ஈடு, இணை வரவே முடியாது என்றும் நாங்கள் பேசிக் கொண்டோம். ஆயினும் நான் நடிக்கும் போது, ஸ்ரீதேவி மேடம் அவர்களின் நடிப்பைப் பார்த்து வந்த உந்துதல் என்னை சிறப்பாக நடிக்க வைத்தது எனலாம். என்னை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் இது என்று சொல்லலாம். ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்.” என்று உறுதியுடன் கூறுகிறார்.