எப்படி இருக்கிறது அட்லீ சம்பவம் – “ஜவான்” திரை விமர்சனம்!
இயக்குனர் அட்லீ முதல்முறையாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தை பற்றி பார்க்கலாம்.
படத்தின் ஆரம்பத்தில் ரத்த காயங்களுடன் ஆற்றில் அடித்து வரும் ஷாருக்கானை ஊர் மக்கள் காப்பாற்றி மருத்துவ உதவிகள் செய்கின்றனர். இதனை தொடர்ந்து அங்கு வரும் மர்ம கும்பல் அங்குள்ள மக்களை கொன்று குவிக்கிறது. உடலில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ஷாருக்கான் திடீரென கண்விழித்து மர்ம கும்பலை அடித்து விரட்டி ஊர் மக்கள் அனைவரையும் காப்பாற்றுகிறார். இதனால் அவரை அந்த ஊர் மக்கள் கடவுளாக பார்க்கின்றனர். கட் செய்தால் நகரின் மெட்ரோ ரயிலை ஆறு பெண்கள் கொண்ட குழு கடத்துகிறது. அந்த குழுவின் தலைவரான ஷாருக்கான் பயணிகளை விடுவிக்க வேண்டும் என்றால் நான் கேட்பதை செய்ய வேண்டும் என்று விசாரணை அதிகாரி நயன்தாராவிடம் நிபந்தனை விதிக்கிறார். அவரது நிபந்தனை நிறைவேற்றப்படுகிறது. அனைவரையும் விடுவிக்கும் ஷாருக்கான் குழு அடுத்து சுகாதாரத்துறை அமைச்சரை கடத்துகிறார்கள். யார் இவர்கள்? எதற்காக இதனை செய்கிறார்கள் ? ஷாருக்கான் யார் ? என்ற கேள்விக்கு இரண்டாம் பாதியில் விடை சொல்கிறது ஜவான்.
அட்லீ தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர். முதல்முறையாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்குகிறார் என்றதும் எதிர்பார்ப்பு எகிறியது. அந்த எதிர்பார்ப்பை அட்லீ பூர்த்தி செய்துள்ளார் என்றே சொல்லலாம். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார். ஷாருக்கான் படம் முழுக்க பட்டாசாக வெடித்துள்ளார். வயதான தோற்றத்தில் வந்தாலும் பட்டையை கிளப்பி உள்ளார். இந்த வயதிலும் இளமையாக தெரிகிறார். இடைவேளை காட்சி திரையரங்குகளில் விசில் சத்தம் காதை பிளக்கிறது. முதல் பாதி எந்தவித தொய்வும் இல்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது.
நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்க்கிறது. ஷாருக்கான் உடன் வரும் பிரியாமணி உள்ளிட்ட பெண்களின் கதாபாத்திரமும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஊழல், சமூக அக்கறை, அரசியல்வாதிகளின் அலட்சியம் என பேசியுள்ளார். நாட்டில் பல இடங்களில் நடந்த விஷவாயு தாக்குதல், வங்கி கடனால் விவசாயிகள் உயிரிழப்பு, ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் உயிரிழந்தது என உண்மை சம்பவங்களை அழகாக திரைக்கதையில் சேர்த்து அதனை அற்புதமாக காட்சிபடுத்தியுள்ளார்.
தீபிகா படுகோனே சில காட்சிகளில் வந்தாலும் நன்று. விஜய் சேதுபதி வில்லனாக இதுவும் அதகளம் செய்துள்ளார். ஆயுத வியாபாரியாக வரும் இவரது கதாபாத்திரம் நாட்டின் சாபக்கேடாக இருக்கும் மிகப் பெரிய பணக்கார தொழிலதிபர்களை நியாயப்படுத்துகிறது. ஜிகே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு காட்சிகளை அற்புதமான காட்டியுள்ளது. ரூபனின் எடிட்டிங் கச்சிதம். அனிருத்தின் பின்னணி இசை படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அட்லீ படங்கள் பொதுவாக ஏற்கனவே பார்த்த பல படங்களை நியாயப்படுத்தினாலும் அதனை முற்றிலும் மாற்றி வேறு ஒரு படத்தை நமக்கு கொடுத்துவிடுவார். இதிலும் ஒருசில படங்கள் நமக்கு நியாபகம் வந்தாலும் அதனை மறக்கடிக்கிறது அட்லீயின் திரைக்கதை.
இங்கிருந்து பாலிவுட் வரை சென்று அங்குள்ள முன்னணி நடிகரை வைத்து படம் இயக்குகியுள்ளார் அட்லீ. ஒருசில குறைகள் இருந்தாலும்
ஒரு தமிழ் சினிமா ரசிகராக அட்லீயை வாழ்த்துவோம். மொத்தத்தில் ஜவான் – காவலன். ரேட்டிங் 3.8/5