full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

`ஜெயலலிதா மேடமா கங்கனாதான் நடிக்க முடியும்; ‘ – சசிகலாவாக நடிக்கும் பூர்ணா

 

நடிகை பூர்ணா

 

 

“இந்த வருஷம் ஆரம்பமே நல்லா இருக்கு. தமிழ்ல ரெண்டு முக்கியமான படத்துல நடிச்சுகிட்டிருக்கேன். கதையைப் பொருத்தும், அதுல என்னோட கேரக்டர் பொறுத்தும்தான் படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன். `நல்ல நடிகை’னு பெயர் வாங்கினா போதும்” என்கிறார் நடிகை பூர்ணா.

மலையாள படமான ‘ஜோசஃப்’ படத்தின் தமிழ் ரீமேக்கிலும் A.L.விஜய் இயக்கிக்கொண்டிருக்கும் `தலைவி’ படத்தின் சசிகலா கதாபாத்திரத்திலும் பிஸியாக நடித்து வரும் பூர்ணாவிடம் ஒரு சிட் சாட்!

“பாலா சாரோட இயக்கத்துல நடிக்கணும்கிறது ரொம்ப நாள் ஆசை. ஒருநாள் அப்படி வாய்ப்பும் வந்தது. ஆனா, நடக்காம போயிடுச்சு. இப்போ அவர் தயாரிக்கிற படத்துல நடிக்கிறது சந்தோஷமா இருக்கு. மலையாளத்துல ரிலீஸான `ஜோசஃப்’ படத்தோட தமிழ் ரீமேக்ல நான் நடிக்கிறேன். இந்தப் படம் அங்க செம ஹிட்டாச்சு. இந்தப் படத்தை மலையாளத்துல இயக்கின பத்மகுமார் சார்தான் தமிழ்லயும் டைரக்ட் பண்றார்.”

“ஆர்.கே.சுரேஷ் இந்தப் படத்தோட ஹீரோவா நடிக்கிறார். படத்தோட ஸ்க்ரிப்ட்டைப் படிக்கும்போதே பாலா சார், `இந்தப் படத்துல வர்ற மனைவி கேரக்டருக்கு பூர்ணா’னு குறிச்சி வெச்சிட்டாராம். இதை மகேந்திரன் சாரோட பையன் ஜான் மகேந்திரன் என்கிட்ட சொன்னப்ப ஆச்சர்யமா இருந்தது. ஜான் சார்தான் இதுல இணை இயக்குநரா வேலைபார்க்கிறார். இந்தப் படத்துல நடிக்கிறதுக்காக பாலா சார் ஆபீஸ்ல இருந்துதான் எனக்கு போன் வந்தது. `ஜோசஃப்’ படத்தை நான் தியேட்டர்ல போய் பார்த்திருக்கேன். ரொம்ப நல்லா இருந்தது; எனக்கும் பிடிச்சிருந்தது. இந்தப் படத்துல என்னோட பங்கு இருக்கப்போறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. கொடைக்கானல், சென்னைனு ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு. இதுவரைக்கும் ஒரு ஷெட்யூல் முடிஞ்சிருக்கு.”

பூர்ணா

“இன்னும கூட நிறைய பேர் என்னை `சுபத்ரா’னு சொல்லிதான் கூப்பிடுறாங்க. இதுக்காக ராமுக்கும் மிஷ்கினுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்தக் கேரக்டர் மாதிரி எனக்கு இன்னொரு கேரக்டர் கிடைக்குமானு கேட்டா அது சந்தேகம்தான். இதுக்கப்புறம் நிறைய கதைகள் வந்தன. எல்லாத்தையும் தவிர்த்துவிட்டேன்.”

“இது தவிர ஏ.எல்.விஜய் சாரோட ‘தலைவி’ படத்துல கமிட்டானதை என்னோட அதிர்ஷ்டமா நினைக்கிறேன். இந்தப் படத்தைப் பத்தி எல்லா மீடியாவுலேயும் டாக் போயிட்டிருக்கு. கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா படத்தோட வேலைகள் நடந்துகிட்டிருக்கு. முக்கியமா ஜெயலலிதா மேடமோட பயோபிக்னு தெரிஞ்சதுனாலயே படத்தைப் பார்க்கிறதுக்கு நிறைய பேர் காத்துக்கிட்டிருக்காங்க. நானும்கூட. ஒரு நாள் விஜய் சார் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி, `சேலையில இருக்கிற போட்டோஸ் அனுப்ப முடியுமா’னு கேட்டாங்க.”
பூர்ணா
“அனுப்பிட்டு வெயிட் பண்ணேன். படத்துல பெரிய பெரிய கேரக்டர்கள் இருக்கிறப்ப நமக்கு சான்ஸ் கிடைக்குமானு சந்தேகமா இருந்தது. அதுக்கப்புறம் விஜய் சார், `நம்ம ஒண்ணா வொர்க் பண்ணப்போறோம். சீக்கிரம் உங்களுக்கான ஷாட் இருக்கும்’னு சொன்னார். படத்துல சசிகலாவோட கேரக்டர்ல நடிச்சிருக்கேன். சின்ன போர்ஷன்தான் பண்ணியிருக்கேன். ஏன்னா, படத்தோட கதை முழுக்க ஜெயலலிதா மேடமை சுத்திதான் இருக்கும். ஆனா, இது மாதிரி ஒரு பெரிய படத்துல முக்கியமான ரோல் பண்றதே சந்தோஷம். சென்னையில படத்தோட ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு. ஜெயலலிதா மேடம் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, படிச்சதில்லை. அரசியல் பத்தி எனக்கு அவ்வளவு தெரியாது.’

 

கங்கனா

 

 

“கங்கனாவோட பெரிய ரசிகை நான். ஸ்பாட்டுலதான் அவங்களை நேர்ல பார்த்தேன். எத்தனை வருஷமானாலும் சினிமா துறையில அவங்களுக்கான பெயர் இருக்கும். எந்தக் கேரக்டரைக் கொடுத்தாலும் சிலர்தான் அதைச் சரியா பண்ணுவாங்க. அதுல ஒருவர்தான் கங்கனா. அவங்க நடிச்ச படங்கள் எல்லாமே பார்த்திருக்கேன். கங்கனாவைப் பார்க்கும்போது அவங்க நடிச்சிருந்த கேரக்டர்கள்தான் நினைவுக்கு வரும். காபி குடிக்கிற மாதிரி நடிச்சுக் கொடுத்திருவாங்க. ஜெயலலிதா ரோலுக்கு ரொம்ப சரியான தேர்வு அவங்கதான்.

சேர்ந்து நடிக்கும்போது அவங்களோட பாடிலாங்குவேஜைக் கவனிச்சேன். எனக்கு இந்தி பெருசா தெரியாது. இருந்தாலும் ரெண்டு பேரும் பேசிக்கிட்டோம். என்கிட்ட மட்டுமில்லாம எல்லா ஆர்டிஸ்ட் கூடவும் நல்லா பழகினாங்க. ரொம்ப கம்ப்ஃபோர்ட்டான நடிகை கங்கனா.”

 

 

இயக்குநர் A.L.விஜய்

 

“அவங்களை மாதிரிதான் இயக்குநர் விஜய் சாரும். ரொம்ப கூல்! எத்தனை ஷாட்டா இருந்தாலும் ஆரம்பத்துல இருந்து சொல்லிக் கொடுப்பார். எல்லா ஆர்டிஸ்ட்களையும் ஸ்வீட்டா ட்ரீட் பண்ணுவார். எனக்குத் தெரிஞ்ச எல்லார்கிட்டயும் ஏ.எல்.விஜய் சார் பத்தி சொல்லிகிட்டிருக்கேன்” என்ற பூர்ணாவிடம் ‘சிஏஏ’ போராட்டம் பற்றிக் கேட்டோம்.

“குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எனக்குச் சொல்ல தெரியல. எது சொன்ன சரியா இருக்கும்னும் தெரியல. ஆனா, ஒண்ணு சொல்ல விரும்புறேன். எல்லாரும் சமம்” என்று ஷம்னா கசீமாக (Shamna Kasim) பதில் சொன்னார் நடிகை பூர்ணா.