full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஓ.டி.டி.யில் ரிலீஸ் ஆகும் ஜெயம் ரவியின் ‘பூமி’

கொரோனா பரவலால் தியேட்டர்களை பல மாதங்களாக மூடி வைத்துள்ளனர்.

கொரோனா பரவலால் தியேட்டர்களை பல மாதங்களாக மூடி வைத்துள்ளனர். இதனால் புதிய படங்கள் நேரடியாக இணையதளமான ஓ.டி.டி.யில் வருகின்றன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏற்கனவே ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வெளிவந்தன. விஜய் சேதுபதியின் ரணசிங்கம், அனுஷ்காவின் சைலென்ஸ் ஆகிய படங்கள் அடுத்த மாதம் 2-ந்தேதியும் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று 30-ந்தேதியும் ஓ.டி.டி.யில் வருகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவியின் பூமி படமும் ஓ.டி.டி.யில் வருகிறது.

இதுகுறித்து 3 ஓ.டி.டி. தளங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பூமி, ஜெயம் ரவிக்கு 25-வது படம். லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். ஜெயம் ரவி ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமய்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள தமிழன் என்று சொல்லடா பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. விவசாயத்தை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.