ஜாகுவார் ஸ்டுடியோஸின் பி வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-மிர்ச்சி சிவா நடிக்கும் கோல்மால் படத்தின் முக்கிய காட்சிகள் மொரீஷியஸில் வெற்றிகரமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விடுமுறைக்காக படக்குழு சென்னை திரும்பியுள்ளது. சென்னையில் சில முக்கிய காட்சிகளை படமாக்கிய பின்னர் ஜனவரி மாதம் மொரிஷியஸுக்கு கோல்மால் குழுவினர் மீண்டும் செல்லவுள்ளனர்.
“கடந்த மாதம் மொரீஷியஸில் படப்பிடிப்பை ஆரம்பித்து சுமார் 25 நாட்கள் முக்கியப் பகுதிகளை படமாக்கியுள்ளோம். அனைத்துக் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. முழுநீள நகைச்சுவைப் படமாக அனைத்துப் பிரிவினரும் ரசிக்கக் கூடிய வகையில் கோல்மால் இருக்கும்,” என்று இயக்குநர் பொன்குமரன் கூறினார்.ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா ஆகியோருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர் கூறுகையில், “இருவரும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். கோல்மால் படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரியும் பேசப்படும். பாயல் ராஜ்புத், தான்யா ஹோப், யோகி பாபு, ஆடுகளம் நரேன், மனோபாலா, சுப்பு பஞ்சு,வையாபுரி, யூகி சேது, சஞ்சனா சிங், சாது கோகிலா, விபின் சித்தார்த், ரமேஷ் கண்ணா, கேஎஸ்ஜி வெங்கடேஷ், மாளவிகா, ஜார்ஜ் மரியன் மற்றும் மது சினேகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்,” என்றார்.
கே.பாக்யராஜ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் உதவியாளராக இருந்த பொன்குமரன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தின் கதையை எழுதியர் ஆவார். விஷ்ணுவர்தனா, ஏஜமானா ஆகிய வெற்றிகரமான கன்னட படங்களையும், தமிழ்-கன்னட இருமொழி திரைப்படமான சாருலதாவையும் இயக்கியுள்ள பொன்குமரனின் நேரடித் தமிழ்ப் படமாக கோல்மால் அமைந்துள்ளது.கோல்மாலின் ஒளிப்பதிவை எஸ் சரவணன் கையாள, அருள் தேவ் இசையமைக்கிறார். படத்தொகுப்புக்கு டான் போஸ்கோவும், கலை இயக்கத்திற்கு சிவாவும், பாடல் வரிகளுக்கு மதன் கார்க்கி, விவேகா ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர். பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன என்று இயக்குநர் தெரிவித்தார்.
ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள கோல்மால் படத்தை பொன்குமரன் இயக்கி ஜாகுவார் ஸ்டுடியோஸ் பி வினோத் ஜெயின் தயாரித்துள்ளார். 2022-ஆம் ஆண்டின் முதல் பாதியில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.