ஆர் அய்யனார் இயக்கத்தில், ஏ.பி.கே. பிலிம்ஸ், சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘உறுதி கொள்’. இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார்.
இவர்களுடன் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர், கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு – பாண்டி அருணாசலம், இசை – ஜூட் லினிகர், எடிட்டிங் – எம்.ஜேபி, பாடல்கள் – மணிஅமுதன், ஸ்டண்ட் – டேஞ்சர் மணி, தயாரிப்பு – பி.அய்யப்பன் சி.பழனி, எழுத்து, இயக்கம் – ஆர்.அய்யனார்.
படத்தின் இசையமைப்பாளர் ஜுட் லினிகர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல பாடகரும் ஆவார். இந்த இளம் இசைக்கலைஞர் குழந்தை பருவத்திலிருந்தே இசையைப் பற்றிய ஆர்வத்துடன் இருந்தார். ஜுடின் தந்தையும் ஒரு இசைக்கலைஞர் என்பதால் அவர் இசை ஆர்வமும், அறிவும் அங்கிருந்தே வளர்த்துக்கொண்டுள்ளார். தேவாலயத்தில் இசைக்கருவிகள் வாசிப்பது மற்றும் பாடுவது என எப்போது இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த ஜுட் லினிகர் வளர்ந்த போது, அவர் ஒரு பியானியவாதி என்று அறிந்து கொண்டார்.
எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, அவர் ஒரு கீபோர்ட் கலைஞராகவும், பாடகராகவும் பள்ளி பாடல் குழுவில் இருந்தார். பள்ளி பருவத்தில் பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற ஜுட், இசையை ஆராய்ந்து கற்றறிந்தார்.
அவர் கணினிகளை கொண்டு இசையமைத்து, அவற்றைத் தனது இணையத்தில் (Reverbnation.com) பதிவேற்றம் செய்தார். ‘The G7 Conglomerate’ விளம்பர நிறுவனம், ஜுட் இசையமைக்க முதல் வாய்ப்பைத் தந்தது.
அதன் பிறகு சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்த அவர், கல்லூரி பாடல் குழுவில் கலக்கியது மட்டுமில்லாமல், புரோகிராமர் மற்றும் ஆடியோ செயலாக்க தொழில்நுட்ப இசை அமைப்பாளர்களுக்கும், இசை கலைஞர்களுக்கும் பணிபுரிந்தார்.
பல போராட்டங்களுக்கு பின்னால், 3 ஆண்டுகள் கழித்தே திரைப்படத்தில் வாய்ப்பு கிட்டியது. 2016 ஆம் ஆண்டு ஜெய் சிநேகம் பிலிம்ஸ் தயாரிக்கும் உறுதிகொள் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக கையெழுத்திட்டு திரைப்பட இசையமைப்பாளராக உருமாறி இருக்கிறார், ஜுட் லினிகர். அவருக்கு இருந்த இசையின் மீதான ஆர்வமும் அர்ப்பணிப்புமே திரைப்பட இசை அமைப்பாளராக அவரை உயர்த்தியிருக்கிறது.