ஆணவப் படுகொலை விவகாரத்தில், இந்தியாவிலேயே முதல்முறையாக 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்ததன் மூலம் பெண் நீதிபதி அலுமேலு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.
கோவை மாவட்டம் போத்தனூரில் பிறந்த அலுமேலு, பள்ளி படிப்பை, திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியிலும், சட்டப்படிப்பை திருச்சி சட்டக் கல்லூரியிலும் பயின்றார்.
1991 ம் ஆண்டு நீதித்துறையில் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்ற அலமேலு, மாவட்ட நீதிபதியாக கோவையிலும், பின்னர் வேலூரிலும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக திருப்பூரில் பொறுப்பேற்றார் அலமேலு நடராஜன். நீதிபதிகள் மட்டுமல்லாது வழக்கறிஞர்களோடும் இனிமையாக பழகக்கூடிய இவர், அனைவரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டாலும், வழக்குகளில் சட்டப்படி, தீர்ப்பு வழங்கக் கூடியவர் என பெயரெடுத்தவர்.
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விசாரித்து வந்த இவர், செவ்வாய்க்கிழமையன்று வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை உணவு உட்கொள்ளவில்லை என்றும், அதேநேரத்தில், குற்றவாளிகள் சாப்பிட மறுத்த போது, அவர்களிடம் பேசி சாப்பிட வைத்தார் என்றும் கூறப்படுகிறது.
ஆணவப் படுகொலை விவகாரத்தில், இந்தியாவிலேயே முதல் முறையாக 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்ததன் மூலம் சட்டத்துறை வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பை நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கியுள்ளார்.