full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரஜினி அரசியல் பற்றி தடாலடி கருத்து தெரிவித்த நீதிபதி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுத்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ஏராளமானோர் விரும்புவதால் அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:-

தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ஒருசமயம் தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசன் நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

இப்போது, ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுகூட சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது? வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இருக்கின்றனவா? அவரிடம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.