full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இயக்குநர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசையை சூர்யாவின் தாயார் லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் தாயார் சீமா, பிரம்மாவின் தாயார் பார்வதி கோமதி நாயகம் மற்றும் 2டி ராஜாவின் தாயார் சாந்தா கற்பூர சுந்தர பாண்டியன் இணைந்து வெளியிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஜோதிகா, “பெண்கள் பணிபுரியும் போது, வீட்டிலிருக்கும் மற்ற பெண்கள் உறுதுணையாக இருப்பார்கள். எனது அம்மா, சூர்யாவின் அம்மா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிரபாவதி என்ற ஆவணப்பட இயக்குநராக நடித்துள்ளேன். இப்படத்தில் கார்த்தி, பாடல் பாடியிருப்பது படத்துக்கு கூடுதல் பலம். தமிழ்த் திரையுலகில் ஒரு நாயகியின் உண்மையான வயதுக்கு, குறைவான வயதுடைய பாத்திரம் கொடுப்பவர் இயக்குநர் பிரம்மா மட்டும் தான். நிஜமாகவே இந்த எண்ணத்துக்கு இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நாயகி என்றாலே 30 வயது கடந்தவுடன் வயதானவர் என்று முத்திரைக் குத்திவிடுகிறார்கள். பல இயக்குநர்கள் 12 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றே அணுகியுள்ளார்கள். முழுக்கதையோடு பிரம்மா என்னை அணுகினார். திருமணமாகாத பெண்ணாக நடிக்க வேண்டும், டூவீலர் ஓட்ட வேண்டும் என்று முதலில் சொன்னார். அப்போதே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஜிப்ரான் அருமையான இசையைக் கொடுத்துள்ளார்.

நயன்தாரா நடித்திருக்கும் ‘அறம்’ என்ற பெண்ணை மையப்படுத்திய படத்துக்கு இசையமைக்கிறீர்கள். பெண்களை மையப்படுத்திய கதைக்கு முக்கியத்துவம் அளித்தமைக்கு நன்றி. ஊர்வசி மேடம், பானுப்ரியா மேடம், சரண்யா மேடம் என 3 ஜாம்பாவன்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே கொஞ்சம் கடினமாக இருந்தது. அதற்குப் பிறகு ஒன்றாகப் பழகி சந்தோஷமாக நடிக்க ஆரம்பித்துவிட்டோம்.

பெரிய நாயகர்களின் படங்களை இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய படங்களில் பெண்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். அம்மா, தங்கச்சி, மனைவி என உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களின் கதாபாத்திரங்களை படங்களின் நாயகிக்கு கொடுங்கள். நாயகர்களுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நாயகர்கள் என்ன செய்கிறார்களோ, அதனைப் பின் தொடர்வார்கள். சினிமாவில் நடப்பவை இளைஞர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டில் இருக்கும் பெண்களைப் போன்று நாயகிக்கு உடைகள் கொடுக்க முடியாது என தெரியும்.

தயவு செய்து கொஞ்சம் அறிவாளித்தனமான கதாபாத்திரங்கள் கொடுங்கள். காமெடியன் அருகில் நிற்க வைத்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைக்காதீர்கள். மிக கேவலமான அறிமுக காட்சியை கொடுக்காதீர்கள். படங்களில் நாயகி ஒருவர் நாயகன் பின்னால் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லிக் கொண்டே திரிவதை நிறுத்துங்கள். ஒரு நாயகனுக்கு 4 நாயகிகள் வைத்தீர்கள் என்றால், இளைஞர்களும் நாமும் 4 காதலிகள் வைத்துக் கொள்ளலாம் என எண்ணுவார்கள். படத்தில் ஒரு நாயகனுக்கு ஒரு நாயகி போதும். இந்தியாவில் இருக்கும் பெண்களுக்காக சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம்.” என்று கூறினார்.