பல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் ‘ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் சரியான விகிதத்தில் தண்ணீர் தரவேண்டுமே என்பதால் கர்நாடகா மாநிலம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி பொய்த்ததால் தமிழ்நாட்டில் விவசாயம் சிதைந்து விவசாயிகள் பலியானதை உயிர்ப்போடும் உருக்கத்தோடும் எடுத்து சொன்ன கொலை விளையும் நிலம் ஆவணப்படம் நேற்று யுட்யூபில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.
கொலை விளையும் நிலம் படத்தை இயக்கியிருக்கும் பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி முன்பே ‘இது விழாவுக்காகவோ விருதுக்காகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல. எனவே பொத்தி வைக்க மாட்டேன். மக்கள் பார்வைக்கு பொதுவெளியில் வெளியிடுவேன்’ என்று சொல்லியிருந்தார். அதனை நிகழ்த்திக் காட்டும் நிகழ்வு நேற்று 7.3.18 அன்று பிரசாத் லேபில் நடந்தது.
காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவர் க. திருநாவுக்கரசர், அற்புதம் அம்மாள், போராளி வளர்மதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுதா, நடிகர் அபி சரவணன், இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் தங்களது கொள்கை வேறுபாடுகளை மறந்து விவசாயிகளுக்காக ஒரே மேடையில் ஏறினார்கள்.
ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை தந்தது என்று பாராட்டிய அனைவரும் தாங்கள் வெகுகாலம் கழித்து ஒரு படத்தை பார்த்து கண்கலங்கியது இப்போது தான் என்று பகிர்ந்துகொண்டனர். இறுதியாக ஏற்புரை வழங்கிய க.ராஜீவ் காந்தி ஒரு ஆவணப்படம் எடுப்பதற்கும் அதனை கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ்நாட்டில் உள்ள சிரமங்களை எடுத்து சொன்னதோடு எதிர்காலத்தில் தான் எந்த பணியில் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு ஆவணப்படம் எடுப்பேன் என்று உறுதி தந்தார்.
படம் வெளிடப்பட்ட சில நிமிடங்களிலேயே டெல்லி முதல் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தை பகிர்ந்துள்ளார். படத்தை பகிர்ந்ததோடு ‘இந்த ஆவணப்படம் தமிழக விவசாயம் மற்றும் விவசாயிகளின் தற்போதைய நிலையை தெளிவாக விளக்குகிறது’ என்று பாராட்டியுள்ளார். நேற்று வெளியிடப்பட்ட கொலை விளையும் நிலம் ஆவணப்படம் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய நாட்டின் அரசியலிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.