காலா படத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காலா படத்து எதிராக ராஜசேகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருடைய மனுவில், ‘1996-ம் ஆண்டே கரிகாலன் என்ற பெயரை நான் தென்னிந்திய வர்த்தக சபையில் பதிவு செய்துவைத்துள்ளேன். அதனைத் தொடர்ந்து புதுப்பித்துவந்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகத்தான் அந்தத் தலைப்பை புதுப்பிக்கவில்லை. தற்போது, கரிகாலன் என்ற பெயர் காலா படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்தப் பெயரில் படம் தயாரிப்பதை நிறுத்தவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இதுதொடர்பாக நான்கு வாரத்துக்குள் பதிலளிக்கவேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த், பா.ரஞ்சித், வொண்டர் பார் தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய வர்த்தக சபை’ ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு பிப்ரவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ராஜசேகரன் என்பவர் இதுதொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தார். அந்த நீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அறிவுறுத்தப்பட்டதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்துள்ளார்.