திரை ஆளுமையுடன் ‘காளி’ அம்ரிதா

News

திறமை மற்றும் ஆற்றல் வளத்தைத் தாண்டி கவர்ந்திழுக்கும் ஆளுமை எல்லோரையும் தன் வசம் வசியப்படுத்தும். அந்த மாதிரி உதாரணங்கள் மிகவும் அரிது, அதில் ஒருவர் தான் அம்ரிதா. படை வீரன் படத்தில் அவரின் நம்பிக்கை அளிக்கக்கூடிய திரை ஆளுமை மற்றும் பாராட்டை குவிக்கக் கூடிய நடிப்பை பார்த்தவுடன் அவர் கலைக்குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் அல்லது நடிப்பு பயிற்சி பெற்றவராக இருப்பார் என எல்லோரும் நினைத்தனர். ஆனால், “நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது” என சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அம்ரிதா.

மேலும் விரைவில் வெளியாக இருக்கும் காளி படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும்போது, “விஜய் ஆண்டனி சாரின் இசையையும், அவரது நடிப்பையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். மிகப்பெரிய உயரங்களை தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். படப்பிடிப்பில் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார், நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பை பாராட்ட அவர் தவறியதே இல்லை. அது எனக்கு ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாக அமைந்து என்னை இன்னும் மெருகேற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நான் மிகவும் பதட்டப்படும் நெருக்கமான காதல் காட்சிகளில் உதவுவார்” என்றார்.

படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதியுடன் வேலை பார்த்த அனுபவத்தை பற்றி கூறும்போது, “படைவீரன் படத்தின் பாடல் வீடியோ ஒன்றை பார்த்து தான் கிருத்திகா மேடம் என்னை காளி படத்துக்காக தேர்ந்தெடுத்தார். மிகவும் இனிமையானவர், குறிப்பாக ஒரு பெண் இயக்குனர் படத்தில் வேலை பார்த்தது எனக்கு வசதியாக இருந்தது. நான் அசௌகரியமாக உணரும் காட்சிகளில் எனக்கு உதவியாக இருந்தார். அவருடைய தொடர்ச்சியான ஊக்கம் இன்னும் நன்றாக நடிக்க என்னை செலுத்தியது” என்றார்.

உற்சாகத்தோடும், நிறைய சாதிக்கும் கனவுகளோடும் இருக்கும் அம்ரிதா, “சிம்ரன், த்ரிஷா ஆகியோர் தான் என் ரோல் மாடல். அவர்களின் படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன், அவர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷன். சிம்ரன் ஒரு சிறந்த நடிகை, தான் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னை நிரூபித்தவர். அசத்தும் நடனம், எமோஷனல் நடிப்பு, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதாகட்டும் அனைத்திலும் சிறந்தவர். அதே மாதிரி தான் நடிகை த்ரிஷாவும், பல ஆண்டுகளாக நடிகையாக பயணித்து வந்தாலும் தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பது அவரின் பெரும் சாதனை” என்றார்.