full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

காற்று வெளியிடை – விமர்சனம்

காற்று வெளியிடை படத்தின் கதை 1999-ல் தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான கார்கில் போரில் பைலட்டான கார்த்தி, சண்டையின்போது இவர் பயணித்த போர் விமானம் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாக அதிலிருந்து தப்பித்து பாகிஸ்தானில் விழுகிறார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு இருட்டு அறையில் அடைக்கப்படுகிறார். அங்கிருந்தபடியே, தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கார்த்தி நினைத்துப் பார்ப்பதுபோல் கதை தொடங்குகிறது.

இந்திய விமானப்படையில் பைலட்டாக இருக்கும் கார்த்திக்கு ஒருநாள் சிறிய விபத்து ஏற்படுகிறது. ராணுவத்தில் டாக்டராக இருக்கும் நாயகி அதிதி ராவ் இவருக்கு சிகிச்சை அளிக்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவருக்குள்ளும் ஒரு ஆழமான காதல் உருவாகிவிடுகிறது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கும்போது, அவர்களுக்குள் அவ்வப்போது ஈகோ ஏற்பட்டு மோதல் உருவாகிறது. இந்த மோதல் நெடுநேரம் நீடிக்காமல் அடிக்கடி சமரசமும் ஆகிக் கொள்கிறார்கள்.

ஒருகட்டத்தில் திருமணத்திற்கு முன்பே இருவரும் நெருக்கமாகிறார்கள். இதனால், அதிதி ராவ் கர்ப்பமடைகிறாள். இவர்களுக்குள் இருந்த சிறுசிறு மோதல், ஒருநாள் பூதாகரமாகிவிட கோபத்தில் அதிதியை விட்டு பிரிந்துபோகிறார் கார்த்தி. அந்த நேரத்தில்தான் கார்கில் போர் ஆரம்பிக்க, கார்த்தி போருக்கு போய் பாகிஸ்தானில் சிக்கிக் கொள்கிறார்.

கர்ப்பிணியாக விட்டுவந்த தனது காதலியிடம் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணத்தில் பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கிறார் கார்த்தி. இறுதியில், அவர் அங்கிருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்து தனது காதலியை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.

கார்த்தி இப்படத்தில் பைட்டர் பைலட்டாக வருகிறார். அந்த கதாபாத்திரத்திற்கு ஓரளவுக்கு பொருந்தியிருக்கிறார் என்று சொன்னாலும், மணிரத்னம் படங்களின் கதாநாயகனுக்கு இவர் பொருந்தவில்லை என்றுதான் தோன்றுகிறது. பெரும்பாலான காட்சிகளில் இவரது முகத்தை குளோசப் காட்சிகளாக காட்டியிருக்கிறார். அந்த இடங்களில் எல்லாம் இவரை பெரிதாக ரசிக்க முடியவில்லை. நடிப்பை பொறுத்த அளவுக்கு தன்னால் எந்தளவுக்கு பெஸ்ட் கொடுக்க முடியுமோ அதை கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

நாயகி அதிதி ராவ் ஹைதரி பார்க்க அழகாக இருக்கிறார். மணிரத்னம் படங்களுக்கு ஏற்ற முகம் இவருக்கு இருக்கிறது. நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் கொடுக்கவேண்டும். டெல்லி கணேஷ் ஒருசில காட்சிகள் வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு போயிருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இதுவரையில் நடித்த படங்களைவிட இந்த படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவருடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். அதிதியின் தோழியாக வரும் ருக்மிணி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

இயக்குனர் மணிரத்னத்தின் காதல் பட வரிசையில் இந்த படமும் முக்கியமாக பேசப்படும் என நம்பலாம். இராணுவத்தில் இருக்கும் இருவரிடையே வரும் காதல், ஈகோவை இப்படத்தில் காட்டியிருக்கிறார். படத்தில் ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயங்களை காட்டியிருந்தாலும், முழுக்க முழுக்க ஒரு காதல் கதையாகவே இதை படமாக்கியிருக்கிறார். மணிரத்னத்தால் மட்டுமே இப்படியொரு படத்தை கொடுக்கமுடியும். நிறைய காட்சிகளில் அவரது பழைய படங்களின் சாயல் இருக்கிறது. காதல் படங்களுக்கு மணிரத்னத்தின் வசனங்கள்தான் பெரிய பலம். அது இந்த படத்திலும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசைதான் படத்தின் கதையை பாலமாக தாங்கிச் செல்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் மணிமுத்தாக இருக்கிறது. அந்த பாடல்களுக்கு வைரமுத்துவின் வரிகள் கூடுதல் பலம் சேர்க்கிறது. காதல் படங்களுக்கு பின்னணி இசையமைப்பது ஏ.ஆர்.ரகுமானுக்கு கைவந்த கலை. அதை இப்படத்திலும் நேர்த்தியாக செய்திருக்கிறார். ரவிவர்மனின் ஒளிப்பதிவு காஷ்மீரை இன்னொரு கோணத்தில் காட்டியிருக்கிறது.