கார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. எப்போதும் க்ளிக் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத்து கதையில் ஒரு படி மேலே சென்றார், தற்போது ஹாட்ரிக் கிராமத்து கதையாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார், கார்த்தி ஹாட்ரிக் அடித்தாரா? பார்ப்போம்.
ஊரிலேயே எல்லோரும் மதிக்கும் பெரிய இடத்து குடும்பத்தலைவராக சத்யராஜ். இவருக்கு 4 பெண் குழந்தைகள் வரிசையாக பிறக்கின்றது.
ஆனால், நமக்கு ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என தவமாய் தவமிருக்க, கார்த்தி பிறக்கின்றார்.(தனக்கு ஏன் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்கு சத்யராஜ் விரும்புவதற்கு ஒரு காரணம் வைக்கப்பட்டுள்ளது).
சத்யராஜ் குடும்பம் தான் அந்த ஊரே என்பது போல் அவ்வளவு பெரிய குடும்பம், அவருக்கு ஒரே ஒரு ஆசை தான், தன் குடும்பத்தினரை ஒன்றாக நிற்க வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான்.
இந்த நேரத்தில் கார்த்தி தன் சொந்தத்தில் திருமணம் செய்யாமல், சாயிஷாவை காதலிக்க, இதனால் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க, இவர்களை எல்லாம் கார்த்தி எப்படி சமாதானம் செய்து தன் விருப்பத்தை நிறைவேற்றினார் என்பதை எமோஷ்னல் செண்டிமெண்ட் கலந்து சுவாரசியமாக கொடுத்துள்ளார்.
இவரை தாண்டி சத்யராஜ், பானுப்ரியா, மௌனிகா, விஜி, யுவராணி, சூரி, சரவணன், சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு ஒரு நட்சத்திர பட்டாளத்தையே படத்தில் கொண்டு வந்து பாண்டிராஜ் அசத்திவிட்டார். அதிலும் இத்தனை பேர் இருக்கிறார்கள், மனதில் நிற்பார்களா என்று பார்த்தால் அனைவருமே ஒரு சில இடத்தில் ஸ்கோர் செய்கிறார்கள்.
மொத்தத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சிறப்பாகவும் எடுத்து பாண்டிராஜ், கார்த்திக்கு ஹாட்ரிக் கிராமத்து வெற்றியை கொடுத்துவிட்டார்.