full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

‘கடைசீல பிரியாணி’-movie review

தமிழ் சினிமாவில் பல்வேறு புதுவிதமான முயற்சிகள் எப்போதும் வந்துகொண்டு தான் சில சமயங்களில் அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிடும் சிலது தோல்வியடைந்து விடும் . அது போலொரு வித்யாசமான சினிமாதான் ‘கடைசீல பிரியாணி’.இயக்குநர் நிஷாந்த் வர்மா இயக்கி இருக்கும் இத்திரைப்படத்தில் வசந்த் செல்வம், விஜய் ராம், தினேஷ் மணி, ஹக்கிம் ஷா ஆகியோர் நடித்திருக்கின்றனர். தன் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க கிளம்பும் சகோதரர்கள் மூவர் தங்கள் எண்ணப்படி பழி வாங்கினார்களா…? அவர்களது முயற்சியின் போது நிகழ்ந்த அதிர்ச்சிதரும் திருப்புமுனை சம்பவங்கள் என்ன என்பது தான் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை.பெரிய பாண்டி, இள பாண்டி, சிக்கு பாண்டி என்ற இந்த மூன்று சகோதர்களும் கேரளாவில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒரு பெரிய மனிதரை கொலை செய்யக் கிளம்பிச் செல்கின்றனர்.

அந்த பெரிய மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கை இன்னுமே பெரும் சிக்கல்களுக்கு இடையே உள்ளது. அவரது மகன் ஒரு சைக்கோத்தனமான கொலைகாரன். அப்படியொருவன் வீட்டில் இருப்பதை தெரிந்ததும் சகோதரர்கள் மூவரும் பயத்தில் எடுத்த முடிவும் அதன் தொடர்ச்சியாக நடக்கும் வன்முறைகளும் கதைக்கு விறுவிறு நகர்வைத் தருகின்றன.காட்சிகள் இந்திய திரைமொழி பாணியில் அல்லாமல் சர்வதேச பாணியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு இரண்டும் ஒன்றுக் கொண்டு சளைத்தது அல்ல என்பது போல போட்டியிடுகின்றன. ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப், அசீம் முஹமத் ஆகியோரின் ஒளிப்பதிவு கேரளாவின் குளுகுளு வனத்திலும் கூட வன்முறைக் காட்சிகளை அனல் தெறிக்க பதிவு செய்கிறது. படத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கலர் டோன் சிறப்பு.இப்படத்தின் சிறப்பு ஒலிக்கலவை மிகச் சிறப்பாக அணுகப்பட்டிருக்கிறது. குளிர்ந்த மலைப் பிரதேசத்தில் ஒருவர் தன் கையில் இரும்பு உருளையை தரையில் தட்டி ஒலி எழுப்பும் காட்சியில் நமக்கும் உடல் கூசுகிறது. அத்தனை நுட்பமான ஒலிக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. வினோத் தனிகாசலம், ஜோத் பவுல், நீல் சபாஸ்டின் ஆகியோரின் ஒலி வேலைகள் அதிரடி.

குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க முடியாத படி வன்முறைக் காட்சிகளும், வசை மொழிகளும் நிரம்பி இருக்கின்றன. ஆசூயை உணர்வைத் தரும் வசனங்களையேனும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் தந்தையின் உடலை ‘ஒரு ஓவியம் போல உள்ளது’ என வர்ணிக்கும் சைக்கோ கொலைகார மகன் கதாபாத்திரம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மோஹன்லால் எனும் கதாபாத்திரமான இதில் ஹக்கிம் ஷா நடித்திருக்கிறார். அவர் தன் சின்ன வயது மனக் காயங்கள் குறித்து பேசும் காட்சி அருமை. படத்தின் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் பாதியாக குறைந்து போனது வருத்தம். லாரி ஓட்டுநராக வருகிறவர் குடும்பம் குறித்து சொல்லும் ப்ளாஸ்பேக் கதை வொர்க்அவுட் ஆகவில்லை. விஜய் சேதுபதியின் குரலில் துவங்குகிறது இக்கதை. அதேபோல், இறுதிக் காட்சியில் ஒரு திருப்புமுனையினை ஏற்படுத்தி கதையை கச்சிதமாக முடித்து வைக்கிறார் விஜய் சேதுபதி. ஒரே ஒரு காட்சியில் விஜய் சேதுபதி வந்தாலும் அது படத்திற்கு நல்ல நிறைவை தருகிறது.இது ஒரு சுயாதீன சினிமாவாக நண்பர்களின் பொருளாதார உதவியுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. பிறகு இப்படத்தைப் பார்த்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தை வெளியிட முன் வந்திருக்கிறார்கள். மாற்று சினிமா முயற்சிகளுக்கான வெளி ஓடிடிதான் என நாம் பேசிக் கொண்டிருக்கும் போது இப்படியொரு சினிமா திரையரங்கில் வெளியாவது வரவேற்கத்தக்கதே.