தரங்கம்பாடியில் கவுன்சிலராக இருக்கும் பரத், அந்த ஊரில் தன்னால் முடிந்த பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இவருக்கென்று தனி மரியாதை அந்த ஊரில் உள்ளது. பலரும் போற்றும் படி நடந்து வருகிறார். இந்நிலையில், அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ். இவருடன் ராஜகுமாரானையும் சமையல்காரராக அழைத்து வருகிறார்.
மிகவும் இரக்கம் குணம் கொண்ட ராஜகுமாரன் தன்னால் முடிந்த சிலருக்கு உதவி செய்து வருகிறார். இப்படி செய்யும் உதவியால் அந்த ஊரில் ஆசிரியராக இருக்கும் ராதிகா பிரசித்தாவுக்கும் ராஜகுமாரனுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. மேலும் ராதிகாவுடன் இருக்கும் சிறுமியிடமும் ராஜகுமாரன் அன்பு காட்டுகிறார்.
இந்நிலையில், அமைச்சர் வெங்கட் அந்த தொகுதிக்கு வருவதால் அதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த தொகுதியின் எம்.ஏல்.ஏ பதவிக்கு பரத்தை அமைச்சர் வெங்கட் பரிந்துரை செய்வதால், ஊரை திருவிழா போல் மாற்றுகிறார் பரத்.
ஊருக்கு வந்த அமைச்சர் வெங்கட், குடி போதையில் பள்ளி மாணவியான பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார். இதை பார்க்கும் பரத், தனக்கு எம்.எல்.ஏ.பதவி கிடைக்கவிருக்கிறது என்பதால் அதை கண்டுக் கொள்ளாமல் சென்றுவிடுகிறார். ஆனால், ஆசிரியர் ராதிகா பிரசித்தா அமைச்சரிடமிருந்து அந்த மாணவியை காப்பாற்றுகிறாள்.
சிறுமிக்கு இவ்வாறு நடந்ததை தெரிந்துக் கொண்ட ராஜகுமாரன், பரத்தையும் அமைச்சரையும் தண்டிக்க நினைக்கிறார். இறுதியில் ராஜகுமாரன் பரத்தையும், அமைச்சரையும் தண்டித்தாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.
இளம் அரசியல்வாதியாக நடித்து மனதில் பதிகிறார் பரத். படம் முழுக்க ரசிகர்கள் கவர்ந்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லத்தனம் கலந்த நல்லவனாக நடித்து, தனது நடிப்பில் மாற்றம் கொடுத்திருக்கிறார். பரத்தின் சினிமா உலகில் இப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சிறப்பான உடல் அமைப்பை பெற்று கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் ராஜகுமாரனின் நடிப்பு. இவரால் இப்படி நடிக்க முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அப்பாவியான தோற்றத்துடன் வலம்வரும் இவரது நடிப்பு அனைவரும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. அதேபோல், நடிப்பு என்று தெரியாத அளவுக்கு யதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் இவர் பேசும் வசனம் ரசிகர்களை நெகிழ வைக்கிறது.
ஆசிரியராக நடித்திருக்கும் ராதிகா பிரசித்தா யதார்த்தம் மீறாத நடிப்பை கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். தனது சொந்த கதையை சொல்லி அழும் காட்சியில் ரசிகர்களையும் அவர்மீது இரக்கப் பட வைக்கிறார்.
நாயகியாக வரும் சுபிக்ஷா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் அனிருத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரத் சீனியும் ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். துறுதுறுவான நடிப்பால் ரசிகர்களை தன் வசப்படுத்தியிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரான இவர் நடிப்பில் நல்ல எதிர்காலம் உண்டு என்றே சொல்லலாம்.
பள்ளி மாணவியாக வரும் கீர்த்தி, போலீஸ் ஏட்டு, இன்ஸ்பெக்டர் ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அமைச்சராக வரும் வெங்கட்டும் காமம் கலந்த அரசியல்வாதியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
பாலியல் தொந்தரவுகளில் பெண்கள் எப்படி சிக்குகிறார்கள். அவர்களை சுற்றி எப்படி ஆபத்து வருகிறது என்பதைப் பற்றி விழிப்புணர்வு படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். படத்தின் டிரைலரில் ராஜகுமாரன் பேசும் வசனமான ‘உலகத்தில் மிகவும் மோசமானவர்கள், கெட்டது நடக்கும் போது அதை கண்டுக்கொள்ளாமல் இருப்பவர்கள்தான் மிகவும் மோசமானவர்கள்… என்பதை அப்படியே படமாக கொடுத்திருக்கிறார். படத்தில் பல காட்சிகளை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார். எந்த இடத்திலும் ரசிகர்களை தோய்வடைய விடாமல் திரைக்கதையை நகர்த்திருக்கிறார்.
அதுபோல் படத்தின் வசனங்கள் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பல வசனங்கள் கைத்தட்டல் வாங்குகிறது. மேலும் பலருக்கு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது.
அருணகிரியின் இசையில் பாடல்கள் சிறப்பானவை. கதையோடு பாடல்கள் பயணிப்பதால் கூடுதலாக ரசிக்க முடிந்திருக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு தேவையான அளவு அமைத்திருப்பது சிறப்பு.
சினிமாவின் பார்வையில் ‘கடுகு’ சுவைக்கலாம்.