கைதி விமர்ச்சனம் – 4.5/5

Reviews
0
(0)

நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது குழுவினரின் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்கிறார். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருக்கும் என்பதை உணர்ந்த நரேன். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை ஒரு இடத்தில் பதுக்கி வைக்கிறார். இதில் தொடர்புடைய கும்பலை பிடிக்க திட்டமிடுகிறார். இதை அறிந்த ஐ.ஜி., போதை பொருட்களை மீட்க அந்த கும்பல் எதையும் செய்ய தயங்காது, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நரேன் குழுவினருக்கு அறிவுரை கூறுகிறார்.

நரேன் குழுவினர் தான் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர் என்பதை அறிந்த வில்லன்கள், அதனை மீட்டுவர அடியாட்களை அனுப்புகிறது. அந்த சமயத்தில் ஜெயிலில் இருந்த கார்த்தி ஆயுள் தண்டனை முடிந்து தன்னுடைய மகளை பார்க்க வேண்டும் என வெளியில் வருகிறார். ஆனால் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜீப்பில் வைத்திருக்கிறது போலீஸ்.

இந்த சூழலில், ஓய்வு பெற உள்ள ஐ.ஜி. போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார். இதில் நரேன் டீமும் கலந்து கொள்கிறது. அப்போது போதை மருந்து கலந்த மதுவை அருந்தியதால் நரேன் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளும் பிரச்சனையில் சிக்குகிறார்கள். இதிலிருந்து மீள அவர்களுக்கு கார்த்தியின் உதவி தேவைப்படுகிறது. தங்களுக்கு உதவி செய்தால் தான், குழந்தையை பார்க்க அனுமதிப்போம் என கார்த்தியை மிரட்டுகிறார் நரேன். இதையடுத்து நரேனுக்கு கார்த்தி உதவினாரா? போதைப்பொருள் கடத்தல் கும்பலை நரேன் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படம் முழுவதையும் தனி ஆளாக தாங்கி நிற்பது கார்த்தி தான். ஆயுள் தண்டனையை முடித்துக்கொண்டு தனது மகளை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கும் தந்தையாக நடிப்பில் மிளிர்கிறார் கார்த்தி. நரேன் போலீஸ் அதிகாரி வேடத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கார்த்தியின் மகளாக நடித்துள்ள பேபி மோனிகா கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்பா-மகள் சென்டிமென்ட் அருமையாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

படத்தின் இரண்டாவது ஹீரோ லோகேஷ் கனகராஜ் தான். பாடல்கள், ஹீரோயின் இல்லாவிட்டாலும் ரசிகர்களின் ஆவலை தூண்டிவிடும் வகையில் திரைக்கதை அமைத்து சீட்டின் நுனியில் அமர வைக்கிறார். கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லாத போதும் போரடிக்காத வகையில் படத்தை எடுத்துள்ளார்.

பாடல்கள் எதுவும் இல்லாத போதும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். படம் முழுக்க முழுக்க இரவில் நடப்பது போல இருக்கிறது. அனைத்து சீன்களையும் சண்டை காட்சிகளையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.

மொத்தத்தில் தீபாவளி போட்டியில் ‘கைதி’ சரவெடி ஆட்டம்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.